Header Ads



சட்ட மா அதிபர் அதிபர் அவகாசம் கோரியதால், மனுக்கள் மீதான விசாரணை, நாளை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இவற்றுள் 10 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. 

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.