முஸ்லிம் கட்சி தலைமைகள், முன்னுள்ள சமூக பொறுப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள 'அரசியலமைப்பு சர்ச்சை' மேலும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு தனது அரசியல் எதிரியாகக் கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கையே இந்த அரசியலமைப்பு சர்ச்சைக்கும் நெருக்கடிகளுக்கும் பிரதான காரணமாகும்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடு உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் பலத்த கோபக் கணைகளை தோற்றுவித்துள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தமை ஒருபுறமிருக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ஒருவரை பதவி நீக்கம் செய்தமையும் ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் பாராளுமன்றத்தை 20 நாட்களுக்கு மேல் ஒத்திவைத்தமையுமே இந்த எதிர்ப்பலைகளுக்கு பிரதான காரணமாகும்.
நிலைமை இவ்வாறிருக்க, தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது யார் என்பதற்கான போட்டியே திரைமறைவில் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று மாலை வரை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி-மஹிந்த தரப்புக்கு ஆதரவளித்துள்ளதுடன் அமைச்சப் பொறுப்புக்களையும் பெற்றுள்ளனர். மேலும் பலரை தமது பக்கம் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மைத்திரி-மஹிந்த அணி முன்னெடுத்து வருகிறது. இதற்காக பல கோடிகள் வரை பேசப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்களே பெரும்பாலும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந் நிலையில்தான் சிறுபான்மைக் கட்சிகள் இவ்விரு தரப்புகளிலும் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கூட மஹிந்த ராஜபக்ச கோருமளவுக்கு நிலைமை வந்துள்ளது. த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றைய தினம் தனது இல்லத்துக்கு அழைத்து பிரதமர் மஹிந்த பேசியிருக்கிறார். இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத முக்கிய பிரச்சினைகள் குறித்தும் எழுத்து மூல உறுதிமொழி வழங்கும்பட்சத்தில் ஆதரவளிப்பது பற்றி பரிசீலிக்க முடியும் என சம்பந்தன் மஹிந்தவுக்கு பதிலளித்துள்ளார்.
அந்த வகையில், மஹிந்த தரப்பின் அடுத்த இலக்கு முஸ்லிம் கட்சிகளை தம் பக்கம் ஈர்ப்பதாகும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 7 எம்.பி.க்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 எம்.பி.க்களுமாக மொத்தம் 12 பேரை இலக்குவைத்த காய் நகர்த்தல்களை மஹிந்த அணி முடுக்கி விட்டிருக்கிறது. ஆனாலும், தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே இருக்கும் என இவ்விரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர். எனினும் அதன் பின்னரான காலப் பகுதியில் மேற்படி தீர்மானம் தொடர்பில் இரு முஸ்லிம் கட்சிகளும் அடிக்கடி கூடி மீள்பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.
முஸ்லிம் கட்சிகள் கடந்த காலங்களில் தமது கட்சி மற்றும் தனிப்பட்ட அரசியல் நலன்களை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளது வரலாறு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட மிகவும் இறுதிக் கட்டத்திலேயே மஹிந்த தரப்பிலிருந்து விலகி, பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்ததை நாம் அறிவோம். அந்த வகையிலும் பாராளுமன்றம் கூடி வாக்கெடுப்பு நடக்கும் கணம் வரைக்கும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை உறுதிபடக் கூற முடியாது என்பதே நிதர்சனமாகும்.
எனினும் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் நலன், எதிர்காலம், பாதுகாப்பு மற்றும் சமூகம் எதிர்நோக்கும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தியே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். மாறாக தனி நபர் மற்றும் கட்சி நலன்களை முன்வைத்து எடுக்கும் தீர்மானமானது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மேலும் இருண்ட யுகத்தில் தள்ளவே வழிவகுக்கும். இது தொடர்பில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
-Vidivelli
The Muslim Political parties and their leaders should change their thinking and approach in politics. Their behaviour so far only in consideration of their own personal or party interests has gained the entire Muslim community the label of being 'OPPORTUNITS' because of the fault of these leaders and their parties. At least from now on, and particularly in a crucial situation as now that affects the future well-being of the country, these Muslim leaders and parties should take decisions that will do good for the whole country. It is only then that the entire community will earn the respect and trust of the whole country.
ReplyDeleteஇந்த தருணம் முஸ்லீம் சமூகத்தின் கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியுமான சூழலாக காணப்படுகின்றது .எனவே முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பத்தை முஸ்லீம் சமூகத்திட்கு பிரயோசனம் வழங்கும் வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
ReplyDelete