Header Ads



மீண்டும் மரண பயம், மக்கள் பாரிய நெருக்கடி - மெதடிஸ்த திருச்சபை அறிக்கை

மீண்டும் பொது மக்கள் பாரிய நெருக்கடிக்கும் மரண பயத்திற்கும் உள்ளாகி அடுத்த நொடிப்பொழுதில் என்ன நடக்கும் என செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்- இலங்கை மெதடிஸ்த திருச்சபை ஊடக அறிக்கை

நாட்டில் மீண்டும் ஒரு முறை மிகப்பெரிய ஜனநாயக மீறல் இடம் பெற்று, நீதிக்கும் உண்மைக்கும் மானிட நேயத்திற்கும் எதிரான அவலமான சூழல் வலிந்து ஏற்படுத்தப்பட்டு, சட்டம் ஓழுங்கு அரசியல் சாசனம் என்பவை முடக்கப்பட்டு, துன்பம் மிக்க வன்முறை சூழல் நாட்டில் பொறுப்புமிக்கவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டமை மிகவும் வேதனைக்கும் ஏமாற்றத்திற்குமுரிய விடயமாகும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபை, வடக்கு, கிழக்கு திருமாவட்ட அவை, நீதிக்கும் சமதானத்திற்குமான பணிக்குழு ஆகியவை இணைத்து இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

வடக்கு கிழக்கு அனைத்து மக்களின் சார்பிலும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை சார்பிலும் ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவதோடு,எமது வன்மையான கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் ஜனநாயக சூழலையும் அமைதி நிலையினையும் ஏற்பபடுத்தி மக்களின் இயல்புநிலை வாழ்வுக்காகவும் மானிடநேய மாண்புக்காகவும் செயற்படுமாறு நீதிக்காக செயற்படும் அனைத்து தரப்பினரையும் கோரி நிற்கின்றோம்.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கொடிய அழிவுகளையும் பாரிய இழப்புக்களையும் சந்தித்து இன்நேரம் வரையும் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது தம்முடைய அடிப்படை நியாயங்களுக்காக ஏங்கி நிற்கும் மக்கள், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தற்போதய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.

இது மாத்திரமின்றி தமிழ் மக்களிடம் பல வாக்குறுதிகளை வழங்கி பாரியதொரு நம்பிக்கையினை ஏற்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் தேர்தலில் வென்று நல்லாட்சி அமைத்து, இருளான சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாயிற்று என்றும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு வழங்குவதாகவும், இறுதிப்போரில் நடந்த போர்குற்றங்களுக்கு உரிய நீதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக சர்வதேசத்திற்கும் ஐக்கியநாடுகள் சபைக்கும் வாக்குறுதியளித்தாலும், கடந்த முன்றான்றுகளில் இவைகள் யாவும் வெற்றுவாக்குறுதிகளாகவே இருந்திருக்கின்றன.

இன்நிலையில் எவருடைய சர்வாதிகார ஆட்சியை முடித்து நாட்டினை பேரழிவில் இருந்து மீட்டேன் என அரச தலைவர் இது வரை காலமும் முளக்கமிட்டாரோ அவரையே, இன்நாட்டின் அரசியலமைப்பையும் மீறி ஜனநாயத்தை கேலிக்கூத்தாக்கி நாட்டின் இரண்டாம் நிலைபதவியில் அமர்த்தியுள்ளார்.

இவ்வாறன ஜனநாயக மற்றும் நாட்டின் அரசியலமைப்புமீறல் சட்டவிரோத செயற்பாட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த நாடளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தமையானது கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு வடிவம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இதன் மூலம் நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் பாரியஅச்சுறுத்தலை சந்தித்து, சட்டம் ஒழுங்கு என்பது சீர்குலைக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சூழல் தாண்டவமாடத் தொடங்கியுள்ளது.

மீண்டும் பொது மக்கள் பாரிய நெருக்கடிக்கும் மரண பயத்திற்கும் உள்ளாகி அடுத்த நொடிப்பொழுதில் என்ன நடக்கும் என செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். நாடு அனைத்து விடயங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இவ்வாறான ஜனநாயக மறுப்பு வன்முறை சூழலை ஏற்படுத்தி நாட்டு மக்களை அவலத்துக்குள் தள்ளுவதற்கு நாட்டு மக்கள் ஆணைவழங்கவில்லை.

எனவே இவ்வாறான சூழலை அகற்றி நாட்டில் அமைதியையும் நீதியையும் நிலை நாட்டவேண்டியது நீதியையும் சமாதானத்தினையும் விருப்புகின்ற அனைவரினதும் தலையாய கடமையாகும்.

இந்த சூழலை முடிவுக்குக் கொண்டுவர,ஜனநாயகத்தை நிலை நாட்ட உடனடியாக நாடளுமன்றத்தினை கூட்டி விடயங்களைப் பொருத்தமாகவும் ஜனநாயகத்தின் அடிப்படையிலும் கையாள அரசினைக் கோருவதோடு, இதற்காக அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து சமயங்கள் மற்றும் சிவில் மானிட உரிமை செயற்பாட்டாளர்களையும் கோரி நிற்பதோடு, இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு, கிழக்கு திருமாவட்ட அவையினராகத் தொடர்ந்தும் நீதிக்காகவும் சமாதானத்துக்காவும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பாகவும் அர்;ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்பதினையும் உறுதிப்படத் தெரிவித்து நிற்கிறோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.