சம்பந்தன் அநுரவுடன், ஹக்கீம் ரிஷாத் கைகோர்க்க வேண்டும்
அரசியல் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நம்பிக்கை தரும் நகர்வுகள் சிலவும் இடம்பெற்று வருகின்றமை ஆறுதல் தருவதாக உள்ளது.
நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பும் இதன்போது இரு கட்சிகளுக்குமிடையே எட்டப்பட்ட இணக்கப்பாடும் இன்றைய நாட்களில் மிக முக்கியமானதாகும்.
தென்னிலங்கை சிங்கள மக்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்பட முன்வந்திருப்பது ஏனைய அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியான செயற்பாடு என்பதுடன் பணத்துக்காக விலை போகும் கொள்கையற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் முகங்களிலும் கரியினைப் பூசியுள்ளது.
அந்த வகையில், நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி அமைப்பதற்கோ, அரசைக் கவிழ்க்கவோ, ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் ஜனநாயகத்திற்கு முரணான சதித் திட்டங்களை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பிலும், அதில் தலையீடு செய்வது தொடர்பிலும் இணக்கம் எட்டப்பட்டதாகவும் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ''ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும். அரசியலமைப்பை மீறி செயல்பட முடியாது. சமீபத்தில் நடந்த விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை. பதவி நீக்கம், புதிய பிரதமர் பதவி நியமனம் இவை எல்லாம் அரசியலமைப்பிற்கு முரணாக நடந்துள்ளன. இது மக்களின் இறையாண்மையை இல்லாமல் செய்கிறது. ஜனநாயகத்தை இல்லாமல் செய்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை இயன்றளவு எதிர்க்க வேண்டியதும், தடுக்க வேண்டியதும் எங்களின் கடமை. மக்கள் சார்பாக நாங்கள் செய்ய வேண்டிய கடமை. அந்தக் கடமையில் நாங்கள் தவறமாட்டோம். பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நாங்கள் அறிகின்ற வகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இவ்விதமான செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்விதமான செயல்கள் தீவிரமடைந்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. அதனை நாங்கள் எதிர்க்கிறோம். அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
உண்மையில் இவ்விரு கட்சித் தலைவர்களிதும் நிலைப்பாடு பாராட்டுக்குரியதாகும். இதே நிலைப்பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் உறுதியாக இருக்கும் என நம்புகிறோம்.
நாம் எந்தவகையிலும் ஜனநாயகத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு துணைபோகமாட்டோம் என அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்படுத்தி நீதியை நிலைநாட்டப் பாடுபடுவோம் என மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இவ்விரு முஸ்லிம் தலைவர்களும் இரா.சம்பந்தன் மற்றும் அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தமது உறுதிப்பாட்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும். அது இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் குறிப்பாக நீதியாக சிந்திக்கின்ற மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும். அத்துடன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் சோரம் போகும் முஸ்லிம் கட்சிகள் என்ற அவப் பெயரையும் இல்லாதொழிக்கும். இது பற்றி இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் நேர்மையாகச் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
விடிவெள்ளி
Very good idea.
ReplyDeleteசம்பந்தன் அய்யாவை நம்பி இறங்க முடியுமா..
ReplyDeleteபாராளுமன்றம் இன்று கலைக்கப்படாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.
ReplyDeleteRisad hakeem pls suppot to mahinda sir
ReplyDeleteIt is a good article and hope Rishad and Hakeem will follow it. They must safeguard democracy and not the political aspirations.
ReplyDelete