"மஹிந்த பிரதமரானதால், ஞானசாரருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள்"
-ARA.Fareel-
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதால் இப்போது ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும், பொது மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவரது விடுதலைக்காக நாம் சட்ட ரீதியான முயற்சிகளையே மேற்கொள்வோம் என சிங்களே அபி அமைப்பின் தலைவர் ஜம்புரவேல சந்தரதன தேரர் தெரிவித்தார்.
நேற்று ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
கடந்த 3 ½ வருட கால நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படவில்லை. நாட்டுக்காகவும் மதத்துக்காகவும் குரல் கொடுத்த குருமார்களும் பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். எமது வளங்கள் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்பட்டன.
ஞானசார தேரருக்கு எதிராக 1 ½ மாத காலத்துக்குள் 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவரை மௌனிக்கச் செய்வதற்கான சதியாகவே நாம் இதனைக் கருதுகிறோம்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் எமக்குச் சந்தேகம் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சுமார் 100 குருமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா தான் பதவியேற்றபோது தெரிவித்த கருத்துகள் முக்கியமானவையாகும். நீதிபதிகள் மீது ஏதும் முறைப்பாடுகள் இருந்தால் அவற்றை எனக்கனுப்புங்கள். இன்றேல் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். அதனால் எமக்கு நம்பிக்கையுள்ளது.
ஞானசார தேரர் விவகாரத்தில் நாம் சட்டத்தின் மூலமே தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற புதிய அரசாங்கத்திற்கு ஆதரவான பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.
அவர்கள் ஏன் மழையில் திரண்டிருந்தார்கள். 3 ½ வருட கால ஆட்சியில் மாற்றம் அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. இதனாலேயே மக்கள் இன்று கிளர்ந்தெழுகிறார்கள்.
நாட்டின் அரசியலில் இன்று ஸ்தீரமற்ற நிலைமை உருவாகியுள்ளது. அதனால் பாராளுமன்றத்தைக்கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுங்கள் என்றே நாம் கூறுகிறோம் என்றார்.
அது வேறொறு வழியில் நடக்கும்.
ReplyDeleteமகிந்த ஆட்சியை பிடித்தால், ஞானசேர பிக்கு மந்திரி, பிள்ளையான் கிழக்கின் முதலமைச்சர்
ReplyDelete