மஹிந்த - மைத்திரி சபாநாயகர் மீது பழிசுமத்தி, சட்டவிரோதமாக ஆட்சியை தக்கவைக்க முயற்சி
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது மஹிந்த –- மைத்திரி தரப்பினர் சபாநாயகர் மீது பழிசுமத்தி சட்டவிரோதமாக ஆட்சியை தக்கவைக்கவே தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். யார் என்ன முயற்சிகளை எடுத்தாலும் இந்த அரசாங்கம் சட்டவிரோத அரசாங்கம் என்ற சபாநாயகரின் நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிகின்றது. இரண்டு தரப்பும் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனநாயகத்தை மீறிய வகையில் செயற்படுகின்றன எனவும் குற்றம் சுமத்துகின்றது.
தற்போது நிலவும் அரசியல் நிலைமைகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சியினரும் பெரும்பான்மையை நிருபிக்க எடுக்கும் முயற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவர் அரசாங்கத்தை வழிநடத்தும் செயற்பாடுகள் என அனைத்துமே ஜனநாயக விரோதமானதாகும். பாராளுமன்ற விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பினை மீறிய வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக் ஷவினரும் தமக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது ஏனைய கட்சி உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் நிலைமை இன்றைய அரசியல் சூழலில் உருவாகியுள்ளது.
மேலும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கருத்துடன் நாம் இப்போதும் இணங்குகின்றோம். இந்த அரசாங்கம் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே எந்த வகையிலும் புதிய அரசாங்கத்தையோ அல்லது அவர்கள் நியமித்து வரும் அமைச்சுக்களையோ ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் மஹிந்த – மைத்திரி தரப்பினர் தமது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது சபாநாயகர் மீது குறை கூறுவதாகவே நாம் கருதுகின்றோம். தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றால் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டி மஹிந்த தரப்பு அரசாங்கத்தை கொண்டுசெல்ல வேண்டும். இல்லையேல் தாம் ஒதுங்கிக்கொண்டு ஆட்சியை கொண்டுசெல்ல இடமளிக்க வேண்டும். இவை இரண்டும் இடம்பெறாது போனால் தேர்தல் ஒன்றினை உடனடியாக நடத்த இரண்டு தரப்பும் இணக்கம் கண்டு உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.
இவர்களின் அதிகாரப் போட்டியால் நாட்டின் ஜனநாயக செயற்பாடுகள் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை நடுவீதிக்கு இறக்கி இவர்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் கூத்துக்களே இன்று இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான ஆட்சியாளர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்களையே இவர்கள் தவறாக வழிநடத்தும் அரசியல் கலாசாரத்தை இப்போதாவது மக்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment