Header Ads



விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது, நான் செய்த பாவம் - மாவை சேனாதிராஜா Mp

விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் இன்று மாலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், 

தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். காரசாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார். நாங்கள் விரைவில் வருவோம். 

கஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் என்ன சொன்னார்கள். இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த பிரச்சினைக்கு காண்டுவிடக்கூடாது என்பதற்காக. 

பேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார். அதோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்காக காத்திருக்கின்றார். அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார். 

நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ளுங்கள். 

இடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும். அதனை அரசியல் அமைப்புக்கு பொறுத்தமானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம். 

அந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம், நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம். 

நிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம். நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும். 

நாங்கள் இதற்காக எதனையும் கேட்கவில்லை. இனப்பிரச்சனை தீர்விற்காக எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும் என்பதற்காக. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மகாவலி போன்ற திட்டங்களை வேண்டாம் என நாங்கள் நேரடியாக சொன்னோம். அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு 31 ஆம் திகதிக்கு முன்னர் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. உடன்பாட்டுடன் செய்யப்படும் விடயங்கள். அரசியல் அமைப்பு வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா? நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா? 

இந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன? யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி? ஆக சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள. எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும் அதுதான் முக்கியம். 

எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும், ஒரு புதிய தலைமையினை கொண்டு வர வேண்டும் என்று ஆளாக அடிபட்டு திரிகின்றார்கள். அது அல்ல இப்போது எங்களின் பிரச்சினை. இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

தவசீலன்

No comments

Powered by Blogger.