ஆயுபோவான் மைத்திரி என்றார் மோடி, இந்தியாவின் ஆதரவைபெற ரணில் வியூகம் - Exclusive...!
-ராமசாமி சிவராஜா-
ரோ உளவுப்பிரிவு தொடர்பாக அமைச்சரவையில் ஜனாதிபதி கருத்துக் கூறியதாக முதன் முதலில் லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டது... செவ்வாய்க்கிழமை மாலை வந்த இந்த செய்தி அரசியல் அரங்கில் காட்டுத்தீ போல பரவியது...
அமைச்சர்கள் பலர் தமது கைத்தொலைபேசிகளுக்கு வரும் செய்தியாளர்களின் அழைப்புக்களை தவிர்த்தனர்.அமைச்சரவை விபரஙகளை கூறுவதை அவர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் இந்த தகவலை பல அமைச்சர்மார் தமது நெருக்கமானவர்களுக்கு கூற அவர்கள் மூலம் பல விபரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தன..
இந்த செய்தி அடுத்த நாள் - கொழும்பில் இருந்து இயங்கும் இந்தியாவின் இந்து பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனால் இந்தியாவின் தமது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு மறுநாள் புதன்கிழமை இந்து பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது...
இந்த செய்தி வெளிவந்ததும் இந்திய பிரதமர் அலுவலகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது.. பிரதமரின் காதுகளுக்கு இந்த செய்தி சென்றடைந்ததும் உடனடியாக வெளிவிவகார செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி இந்த விடயம் மிகவும் பாரதூரமானதென்பதால் உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், தனக்கும் இதன் உண்மைத்தன்மையை விளக்குமாறும் கேட்டுக் கொண்டார்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அப்போது பெலாரஸ் சென்றிருந்தார்.. அவருக்கும் இந்த தகவல் பறந்தது..
பதறிய புதுடில்லி !
மோடியின் இந்த உத்தரவையடுத்து பதறிய பிரதமர் அலுவலக மற்றும் வெளியுறவுத் துறை - பாதுகாப்பு ஆலோசகர் அலுவலக அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கினர்..
வெளியுறவுத் துறை செயலர் விஜய் கேஷவ் உடனடியாக கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவை உடனடியாக தொடர்பு கொண்டார்.. அது காலை நேரம்..
“என்ன நடந்தது சந்துஜீ... உண்மையில் மீடியாக்களில் வந்த செய்திகள் உண்மைதானா?”
என்ற வெளியுறவுத் துறையின் கேள்விக்கு தனக்குத் தெரிந்த விபரங்களுடன் பதிலளித்தார் உயர்ஸ்தானிகர் சிங்..
“ உங்கள் பதில் எனக்கு விளக்கமாக இருக்கிறது..ஆனால் இந்த விடயம் பிரதமருக்கு ஒரு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.. நமது தேசிய உளவுச் சேவை மீதான குற்றச்சாட்டு நமது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடக் கூடாது.. நீங்கள் உடனடியாக அங்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது ஜனாதிபதியை சந்தியுங்கள்.. எங்கள் நிலைப்பாட்டை சொல்லுங்கள்..” என்று உயர்ஸ்தானிகரை பணித்தார் வெளியுறவுத் துறை செயலர் விஜய் ..
இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதியின் செயலரை தொடர்புகொண்ட தூதுவர் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரினார்.. உடனடியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது...
மறுபுறம் இந்திய வெளியுறவுத் துறை செயலர் இலங்கை வெளியுறவுத் துறை செயலருடன் தொடர்பு கொண்டு பேசி நிலைமையை கேட்டறிந்தார்.. இதன் பின்னர் ஜனாதிபதியின் செயலரை தொடர்புகொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் இதன் பாரதூரத்தினை விளக்கினார்..
அதேசமயம் ஜனாதிபதி செயலகத்துக்கு புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு விரைந்த தூதுவர் அங்கு ஜனாதிபதியை சந்தித்தார்... ( தூதுவர் அங்கு சென்றபோது தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வேறு ஒரு கூட்டத்துக்காக ஜனாதிபதியை சந்திக்க காத்திருந்தனர் )
“அமைச்சரவை கூட்டத்தில் ஒரு பொதுவான விமர்சனத்தை முன்வைத்ததே ஒழிய இந்தியாவுக்கு எதிராக நான் எதனையும் சொல்லவில்லை” என்று ஜனாதிபதி இங்கு தூதுவரிடம் குறிப்பிட்டார்.....
“ சரி எக்செலன்ஸி.. இந்த விடயத்தில் எமது பிரதமர் சற்று கரிசனை செலுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக முக்கியம். நீங்கள் முடிந்தால் அவருடன் ஒரு வார்த்தை பேசுங்கள்.. அதற்கான நேரத்தை ஒதுக்குமாறு நான் பிரதமர் அலுவலகத்தை கேட்கிறேன்.” என்று தூதுவர் கூறியதும் சந்திப்பும் நிறைவு பெற்றது...
தூதுவரின் இந்த சந்திப்புக்கு பின்னர் நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அலுவலகம் உணர்ந்தது... உடனடியாக ஒரு அறிக்கையை விட்டு தெளிவுபடுத்துமாறு வெளிவிவகார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தது.அத்துடன் அமைச்சரவை அலுவலகமும் ஜனாதிபதி செயலகமும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை கூறின.
அதேசமயம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பிரதமர் ரணிலை தொடர்புகொண்டு இதுவிடயத்தில் ஆலோசனை பெற்றிருந்தார்.
மோடியுடன் பேசிய மைத்ரி
அன்றைய தினம் பிற்பகல் பிரதமர் மோடியை தொடர்புகொள்ளலாமென சொல்லப்பட்ட தகவலையடுத்து ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு புதுடில்லிக்கு சென்றது..
அங்கு தொலைபேசி ,செயலாளரினால் மோடியிடம் வழங்கப்பட்ட போது போனை எடுத்த கையோடு ”ஆயுபோவன் எக்ஸலென்ஸி ஹவ் ஆர் யூ” என்றாராம் மோடி..
அதற்கு வணக்கம் தெரிவித்த மைத்ரி நிலைமைகளை விளக்க ஆரம்பித்தார்.“ நாங்கள் சில விடயங்களை பேசினாலும் இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.சில தவறான புரிதல்கள் அடிப்படையில் செய்திகள் வெளிவந்துள்ளன.அதை நாங்கள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார் மைத்ரி.
“ ஓ அப்படியா... நானும் சில விபரங்களை பெற்றேன். இந்த விடயம் குறித்து கவனிக்க பணித்துள்ளேன் .. இலங்கை எங்கள் நட்பு நாடு.. நீங்கள் எனது நண்பர்..இந்தியா இலங்கைக்கு அண்ணன் போன்றவர்... அங்கு ஒரு நல்ல நிலைமை இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். உங்களுக்கு எதிராக ஏதேனும் செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்பில்லை... நாங்கள் விரைவில் சந்திப்போம் .. நமது இந்த நல்லுறவு தொடரவேண்டும்..” என்று இராஜதந்திர ரீதியில் பதிலளித்தார் மோடி...
இந்த தொலைபேசி அழைப்புக்கு பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் விசேட செய்தியாளர் மாநாடு நடைபெறவிருந்த போதும் அது பின்னர் நேற்று வியாழன் வரை பிற்போடப்பட்டது.
ரணில் தடுமாற்றம்
இந்திய உளவுத்துறை சம்பந்தமான செய்திகளால் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளான பிரதமர் ரணில் இந்தியாவுக்கு சென்று பிரதமர் மோடியுடன் நடத்தும் பேச்சுக்கள் குறித்து ஆலோசிக்க தொடங்கினார்..
இந்திய உளவுப்பிரிவு மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஜனாதிபதியின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ரோ உளவுப் பிரிவின் தலைவர் அஜித் குமார் டஸ்மானா ஆகியோரை தனது இந்திய பயணத்தில் சந்திக்கவுள்ளார் ரணில் ...
முன்னதாக திருமண நிகழ்வுக்கு மாத்திரம் செல்லவிருந்த ரணில் அந்த பயணத்தை மாற்றி தன்னுடன் அமைச்சர்கள் மலிக் , அர்ஜுன , சாகல உட்பட்ட 15 பேர் கொண்ட பட்டாளத்தையே அழைத்து சென்றுள்ளார்...
ஜனாதிபதி என்னதான் சமாளிபிக்கேஷன் செய்தாலும் இந்தியா அதனை ஏற்றுக் கொள்ளாதென கருதும் ரணில் இந்த இடைவெளியில் அதனை சாதகமாக தனக்கு பயன்படுத்தி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இந்திய ஆசியுடன் களமிறங்க யோசிப்பதாக சொல்லப்படுகிறது..
இந்தியாவிக்க்கு ரணில் செல்லும் முன்னர் அரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை ஜனாதிபதி கலைத்தார்.. அதுபற்றி பேச்சு நடத்த பிரதமர் ஜனாதிபதியை சந்திக்க முயன்றும் பலனளிக்கவில்லை.. அதேபோல் இந்தியாவுடன் ஏற்பட்டிருக்கும் இந்த விரிசலை சரி செய்வது எப்படி என்பது பற்றி ஜனாதிபதியுடன் ஆலோசிக்க அவர் முயன்ற போதும் அது சாத்தியப்படவில்லை என்று கூறப்படுகிறது..
இதனால் மோடியை சந்திக்கும்போது முழுக்க முழுக்க தனது அதிகாரத்தை எதிர்காலத்தில் எவ்வாறு பலப்படுத்துவது என்ற திட்டத்துடன் ரணில் சூட்சுமமான பேச்சுக்களை நடத்துவார் என்று அவருக்கு நெருக்கமான தகவல்கள் சொல்கின்றன..
“கடந்த ஆட்சிக் காலத்தில் இப்படித்தான் இந்திய உளவுப்பிரிவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.. அப்போதைய ரோ உளவுப்பிரிவுக்கு கொழும்பில் பொறுப்பாக இருந்த இளங்கோ என்பவரின் பெயரை சொல்லி அவர் அரசியலில் ஈடுபடுகிறார் என்று கூறி அவரை டெல்லிக்கு திருப்பி அழையுங்கள் என்று அப்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமே நேரடியாக கேட்டனர். இந்தியா கோபிக்கவில்லை.. அமைதியாக இருந்து ஆட்சி மாற்றம் ஒன்றை செய்தது.. இப்போதும் அதுதான்...ஜனாதிபதியின் கருத்தை அவர்கள் கேட்பார்கள் ஆனால் அமைதியாக இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள்.. நீங்கள் யோசிக்க தேவையில்லை.. அமைச்சரவையில் என்ன நடந்தது என்பதனை பத்துக்கு மேற்பட்ட அமைச்சர்களிடம் உறுதிப்படுத்தியுள்ள கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் அதனை புதுடில்லி வெளியுறவுத்துறை அமைச்சுக்கு இரகசியமாக அனுப்பியுள்ளது. இனி அவர்கள் தீர்மானிக்கட்டும் .. அடிபட்ட நாகம் படம் எடுத்து வைக்கும் பிறகு கொத்தும்... ” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தமிழ் உறுப்பினர் ஒருவர் ரணில் இந்தியா புறப்படமுன்னர் அவரை சந்தித்த போது சொன்னாராம்..
இப்போதுள்ள நிலையில் இந்தியாவை பகைக்க யாரும் விரும்பவில்லை என்றே தெரிகிறது.. இந்திய ரோ உளவாளி பற்றி ஆதாரங்களுடன் சில தகவல்களை முன்னாள் எம் பி விமல் வீரவன்ச சொன்னபோது கூட அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று நாமல் ராஜபக்ச தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்...
இப்படியான பின்னணியில் - ரணிலின் இந்திய விஜயம் முடிந்த கையோடு கொழும்பு அரசியலில் பல மாற்றங்கள் நடக்கலாம்.. ஜனாதிபதி சீனா செல்லவுள்ளதையும் இந்தியா கூர்ந்து அவதானிக்கலாம்...ஏன் ரணில் தனித்து ஆட்சியமைக்க இந்தியா ஆசி வழங்கலாம்.. ( தொண்டமான் .. தமிழ்க்கூட்டமைப்பு உதவிகளுக்கு இந்திய அழுத்தம் கிடைக்கலாம்)...
பார்க்கலாம்..எப்படியோ இனி பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது...
Raw does a lot of ugly things in countries like ours.
ReplyDeleteஇலங்கையை இந்தியாவுக்கு அடகுவைத்து சம்பாதிக்கும் பாரிய பணியை மிகச்சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள் எனத் தெரிகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் இறைவனின் துணை மட்டும்தான் மிஞ்சியிருக்கின்றது.
ReplyDelete