மகிந்தவைப் பிரதமராக்குவதால், நெருக்கடி தீராது – ஜேவிபி
மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதால் மட்டும், தற்போதைய நெருக்கடிகளைத் தீர்த்து விட முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
மருதானையில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜேவிபியின் தொழிற்சங்க பிரிவின் தலைவர் கே.டி.லால்காந்த, ”தற்போதைய நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய அரசாங்கத்தை தெரிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். இது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. அடக்குமுறை அரசாங்கம். இந்த அரசாங்கம் அமெரிக்க டொலரில் அதிகமாகத் தங்கியிருப்பதால் தான், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
மைத்திரிபால சிறிசேனவை அதிபராக இருக்க விட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதால் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது.
இவர்கள் காலத்துக்குக் காலம், மாறி மாறி அதிகாரத்துக்கு வருகிறார்கள். அந்தப் பாவங்களுக்குத் தான் இப்போது விலை செலுத்துகிறோம்.
முன்னர் நாங்கள் ஒரு சர்வாதிகாரியை வைத்திருந்தோம். இப்போது ஒரு பொம்மையை வைத்திருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment