ரணிலை பதவிநீக்க, மைத்திரி பச்சைக்கொடி - முக்கிய கூட்டத்தில் தீர்மானம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏதேனுமொரு வழியில் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தலைமையில் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான தேசிய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற முக்கியத்துவம் மிக்க கூட்டத்திலேயே மேற்படி யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டில் அரசியல், பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா, எஸ்.பி.திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏதேனுமொரு வழியில் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற யோசனையை அதாவுல்லா முன்வைத்தார். அதை சுசில் பிரேமஜயந்த வழிமொழிந்துள்ளார்.
வரவு - செலவுத்திட்ட காலப்பகுதியென்பது அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த காலப்பகுதி என்பதால் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மேற்படி யோசனையின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமான், அதாவுல்லா, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டவர்கள் இக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
அடுத்த வாரமளவில் இந்த குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதேவேளை, கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழுமையாக வெளியேறினால் மாற்று அரசொன்றை அமைப்பதற்கு தானும் ஒத்துழைப்பு வழங்குவார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
A very good political move, Alhamdulillah.
ReplyDeleteThe Sri Lanka Muslim Community to play an important role in this, Insha Allah.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".