Header Ads



நேற்றையை சூடான, அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன..?

-ராமசாமி சிவராஜா-

மைத்திரியின் அதிரடி குற்றச்சாட்டு 
இராஜதந்திர நெருக்கடியில் புதுடில்லி !
நேற்றைய கெபினெட் கூட்ட அதிரடி - இனி என்ன நடக்கும் ?

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்து இப்போது கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுத்தால் ஒரு அவசரத்துக்கு - போர்க்கால சூழ்நிலை ஒன்று ஏற்பட்டால் என்ன செய்வது ?இந்தியப் பிரதமரிடம் இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... தேவைப்படின் இனியும் அதனை தெளிவுபடுத்தி சொல்வேன்...

இப்படி நேற்று அதிரடியாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன . கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைக்கான கொள்கலன் தொகுதியை அமைப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விவாதிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இப்படி அதிரடியாக கூறியிருக்கிறார்..

இந்த விடயம் தொடர்பில் இந்தியாவுடன் முன்னதாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்க வேண்டுமென்றும் பிரதமர் தெரிவித்த போதிலும் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கவில்லை...

“ பிம்ஸ்டெக் மாநாட்டின் போது பிரதமர் மோடியை நான் சந்தித்தேன் .. அப்போது இதை விளக்கினேன் .. அவர் புரிந்துகொண்டார்..” என்று ஜனாதிபதி கூறிய கையோடு பிரதமர் இதனை மேலும் விளக்கி கூற முற்பட்டார்..

அப்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இடையில் குறுக்கிட்டு தனது கருத்துக்களை சொல்ல முயன்றார் . அது பிரதமருக்கு கடுப்பை ஏற்படுத்தியது.“ஒரு பிரதமரின் உரைக்கு குறுக்கே பேசுவது சரியா? சற்று அமைதியாக இருங்கள்” என்று அவரை கடிந்து கொண்டார் ரணில்...

எப்படியோ அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதில் சில விளக்கங்களை கூறினாலும் ஜனாதிபதி ஏற்கவில்லை...

“பிராந்தியத்தில் எப்படி பிரச்சினைகளை கையாளவேண்டும் என்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்துக்கு நான் சென்றபோது - அங்கு அரசியல் தலைவர்களின் உரைகளை உணர்ந்தேன்.” என்றார் ஜனாதிபதி..

இதனால் அந்த அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது..

பொலிஸ் திணைக்களம்...

பொலிஸ் திணைக்களம் நீதியாக செயற்படுகிறதா ? எனக்கெதிராக கொலை முயற்சி நடப்பதாக வந்த செய்திகளுக்கு என்ன நடந்தது...? இந்திய உளவுத்துறை ரோ இந்த சதிகளின் பின்னணியில் இருப்பதாக செய்திகள் என்னிடம் வந்துள்ளன. இந்தியப் பிரதமருக்கு தெரியாமல் இவை நடப்பதாகவே தெரிகிறது.. நானும் அமைதியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்..”

என்றும் ஜனாதிபதி கர்ஜிக்க அமைச்சரவையே ஒரு நிமிடம் ஆடி அடங்கிப் போனது...

இந்திய இலங்கை உறவில் விரிசல்...

இன்னும் சில தினங்களில் பிரதமர் ரணில் இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள நிலையில் ஜனாதிபதியின் இந்த “டூஸ்ரா” இரு நாடுகளுக்கிடையில் உள்ள உறவில் சிறிய விரிசலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது... கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இயங்கும் “ ரோ” உளவுப்பிரிவு சிலநடவடிக்கைளை பின்னால் இருந்து இயக்குவதாக ஜனாதிபதி கருதுகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

மஹிந்தவுடன் இணைந்து இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் தனது முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் “ரோ” தனக்கு எதிராக வந்த சதி முயற்சிகளிலும் பின்னால் இருப்பதாக ஜனாதிபதி கருதுகிறார் என தெரிகிறது...

1.ஜனாதிபதி கொலை சதி முயற்சிகளை வெளியிட்ட நாமல் குமார என்பவரின் வீடு கொழும்புக்கு வெளியில் தூரத்தில் உள்ளது? மன நோயாளி என்று கூறும் இந்திய பிரஜை எப்படி அங்கு போனார்? விலாசம் எப்படி கிடைத்தது? அங்கு போக உதவியது யார்?

2. ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளை லஞ்ச ஊழல் அலுவலகத்தில் சிக்க வைத்த விடயத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்ட இந்திய பிரஜையை பின்னால் இருந்து இயக்கியது யார் ?

3.இடைக்கால அரசு ஒன்று ஏற்படுமாயின் அதை தடுக்க கொழும்பில் அரசியல் காய்நகர்த்தல்களை செய்வது யார் ?

போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் ஆதாரங்களுடன் ஜனாதிபதி வசம் இருப்பதாக தகவல்...

ஆக மொத்தத்தில் “ ரோ” உளவுப்பிரிவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக எதிர்காலத்தில் பிரதமர் ரணிலை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கருதும் ஜனாதிபதி , இப்போதே அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்..

இதன் அடுத்த கட்டமாக அவர் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாகவே இந்திய பிரதமரிடம் முறையிட தயாராகி வருவதாக தகவல்..

இந்த திடீர் அதிரடி மோடி ரணில் சந்திப்பை மகிழ்ச்சியற்றதாக்கி உள்ளது மட்டுமல்ல இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவிலும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது...

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பினை புதுடில்லி பிரதமர் அலுவலகம் வெகு சீரியசாக எடுத்திருக்கிறது....

தனது முக்கியமான உளவு அமைப்பின் மீதான ஒரு நாட்டுத் தலைவரின் குற்றச்சாட்டை புதுடில்லி சர்க்கார் இலகுவில் நிராகரித்து விடமுடியாத இராஜதந்திர நெருக்கடி நிலையே இப்போது ஏற்பட்டுள்ளது..
அதுவே உண்மை !

No comments

Powered by Blogger.