Header Ads



சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை, மஹிந்த ராஜபக்ஸ பெற்றுத்தருவார் - பியசேன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூலமாக சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை நிச்சயம் பெற்று தருவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாய்ந்தமருது பிரதேச செயற்பாட்டாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சந்தித்து  பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை கரையோர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும், காரைதீவு பிரதேச அமைப்பாளருமான நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பி. ரி. தர்மலிங்கமும் கலந்து கொண்டார்.

பொடியப்பு பியசேன இங்கு பேசியவை வருமாறு:-

தமிழர்களுக்கு அஷ்ரப் போன்ற சிறந்த தலைவர் கிடைக்கவே இல்லை. அதே போல முஸ்லிம்களுக்கு அஷ்ரப்புக்கு பின்னர் சிறந்த தலைவர் யாரும் கிடைக்கவில்லை. மக்கள் மீது உண்மையான அக்கறை உடைய தலைவர்களை தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் காண முடியாது உள்ளது. எனவே இந்நாட்டின் உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஸவை தமிழ் பேசும் மக்களின் தலைவராக நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.

அஷ்ரப் ஆரம்பத்தில் தமிழ் தலைவர்களுடன்தான் ஒன்றாக அரசியல் செய்தார். ஆனால் தமிழ் தலைவர்களுடன் ஒன்றாக அரசியல் செய்வதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த நன்மையையும் பெற முடியாது என்று கண்டு கொண்டவராகவே முஸ்லிம்களுக்கென தனியான கட்சியை ஆரம்பித்தார். அவர் வேகமும், விவேகமும் மிகுந்தவராக விளங்கினார். அதுவே அவருக்கு வினையாக மாறி உயிரை குடித்தது. இல்லையேல் இந்நாட்டின் பிரதமராக வந்திருப்பார். 

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெற்று தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியவர்களாகவே பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்களாக சாய்ந்தமருதை சேர்ந்த இளையோர்கள் பலரும் எம்முடன் இணைந்து உள்ளாகள். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை பெறுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நீடித்து இருக்குமானால் சாய்ந்தமருது பிரதேச சபை சாய்ந்தமருது எப்போதோ கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஆனால் முஸ்லிம்களை பகடை காய்களாக பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகள் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. முஸ்லிம்கள் தவறை உணர்ந்தவர்களாக இப்போது மனம் வருந்துகின்றார்கள். வெகுவிரைவில் மீண்டும் மலர உள்ள மஹிந்த யுகத்தில் தனியான பிரதேச சபை கோரிக்கை அடங்கலாக சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

(எஸ்.அஷ்ரப்கான்)

No comments

Powered by Blogger.