Header Ads



எனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை

நான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவி விலகுமாறு பலதரப்பினராலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் சேவையில் 33 வருடங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். இது எனக்கு போதுமானது என்று நினைக்கின்றேன். நான் யாரிடமும் இருந்து ஒரு அற்ப தொகையை கூட வாங்கியது இல்லை. 

இது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். நான் மக்களின் நல்லெண்ணத்தையும் சுயமரியாதையையும் பெற்றுள்ளேன். தற்போது என்னிடம் அன்பு மாத்திரமே உள்ளது. எனது தாயையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மாத்திரமே மிகுதியாக உள்ளது. 

எனது அம்மாவை கேவலப்படுத்தும் வகையில் இரக்கமற்ற சிலர் முகநூல் வாயிலாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தனர். 

எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை என்னால் தாங்கிகொள்ள முடியும். ஆனால் எனது அம்மாவை அவமானப்படுத்துவதை என்னால் தாங்கிகொள்ள முடியாது.

எனக்கு சொந்தமாக வீடு இல்லை. இதை யாரும் நம்பமாட்டார்கள். நான் பதவி விலகினால் எனது குடும்பம் தங்குதவற்கு வாடகை வீடு ஒன்றை பெற வேண்டும்.

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கோரவில்லை. ஆனால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நான் பதவியில் இருப்பது விருப்பம் இல்லை போன்று உணர்கின்றேன். என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த பதவியில் தொடர்ந்து இருப்பது பயனற்றதாகும் என்றார்.

No comments

Powered by Blogger.