சுவிட்சர்லாந்தில் வேலையாட்களை அடிமைகளாக நடத்திய, இந்திய கோடீஸ்வரர்கள் கைது
சுவிட்சர்லாந்தில் வாழும் பிரபல இந்திய கோடீஸ்வரக் குடும்பம் ஒன்று வேலையாட்களை வருடக் கணக்காக அடிமைகளாக நடத்திய விடயம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
சுவிஸ் குடியுரிமை பெற்ற இந்தியர்களான அந்த கோடீஸ்வரர்கள் இந்தியாவிலிருந்து வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்று சுவிட்சர்லாந்து வந்ததும் அவர்களது பாஸ்போர்ட்டுகளை பிடுங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.
மிகக் குறைந்த சம்பளம், அதுவும் இந்திய ரூபாயில், அதுவும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியாவில் வழங்கப்படும்.
வீட்டை விட்டு பல ஆண்டுகளாக வெளியே செல்ல அனுமதிக்கப்படாத இந்த வேலையாட்கள், வாரத்திற்கு ஏழு நாட்கள், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஓய்வின்றி வேலை செய்ய வேண்டும்.
உடல் நலமில்லாமல் போனால், மருத்துவ செலவுக்கான பணமும் அவர்களது சொற்ப ஊதியத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்படும்.
அடிமைகள் போல நடத்தப்பட்ட வேலையாட்களில் ஒருவர் பொலிசாரிடம் புகாரளித்ததையடுத்து பொலிசார், ஜெனீவாவுக்கு வெளியே உள்ள Colognyயில் அமைந்துள்ள அந்த பிரபல கோடீஸ்வரரின் வீட்டை சோதனையிட்டனர்.
விசாரணையில் சுற்றுலா விசாவில் அழைத்து வரப்பட்ட அந்த வேலையாட்கள் ஒருவருக்கும் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய உரிமம் பெறப்படவில்லை.
அவர்களை அழைத்து வந்த கோடீஸ்வரக் குடும்பத்திடம் விசாரித்தபோது, அவர்கள் வேலைக்காக அழைத்து வரப்படவில்லை, அவர்களும் குடும்பத்தினர்தான், வீட்டில் உதவியாக இருப்பதற்காக அவர்கள் அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்தனர். அந்த வேலையாட்களுக்கு வழங்கப்படாமல் மிச்சம் பிடிக்கப்பட்ட பணமே 5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருகிறது.
அந்த கோடீஸ்வரக் குடும்பததைச் சேர்ந்த நான்கு பேர் மனிதக் கடத்தல் உட்பட பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது. தொடர்ந்து அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
Post a Comment