தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இணக்கம் - ஆனால் காணி வழங்க, சிங்களவர்கள் எதிர்ப்பு
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்தும் அகற்றி புதியதோர் இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்கு பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள காணி பள்ளிவாசலுக்கு வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் காணியை பள்ளிவாசலுக்குப் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாரிய நகர திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தம்புள்ளை, ஹைரியா பள்ளிவாசலுக்கென காணியொன்றினை ஒதுக்கி நீண்ட காலமாகியும் அது இதுவரை வழங்கப்படவில்லை.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று தம்புள்ளை ரங்கிரி ரஜவிகாரை அதிபதி மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பிட்ட காணி பள்ளிவாசலுக்கு வழங்கப்படக்கூடாது என பெரும்பான்மை இன சமூகத்தினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்து காணி இதுவரை வழங்கப்படவில்லை. பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்தும் அகற்றிகொள்ள இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்ட காணி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்தக்காணியை தாமதிக்காது பள்ளிவாசலுக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-Vidivelli
Post a Comment