மகிந்தவின் ஆர்ப்பாட்டத்தில், பால் பைக்கற்றில் விசம் கலக்கப்படவில்லை
ஒன்றிணைந்த எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பைக்கற்றுகளில் எவ்வித விஷம் அல்லது மருந்துகள் கலக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 05 ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற ‘ஜனபலய கொழம்பட்ட’ (மக்கள் பலம் கொழும்பை நோக்கி) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலருக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றுகளில் விஷம் கலந்திருந்ததாக, வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி வர்ணகுலசூரிய அலெக்ஸ் நிஷாந்த பெனாண்டோவினால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த் பால் பைக்கற்றுகளில் விசம் கலக்கப்படவில்லை என புலனாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் இருந்த 25 பேருக்கு புறக்கோட்டையில் வைத்து, ஒரு சிலரால் வழங்கப்பட்ட பால் பைக்கற்றுகளில் விசம் ஏற்றப்பட்டு அருந்தக் கொடுக்கப்பட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பால் பைக்கற்று ஒன்றையும் அவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, (B99339/3/18) நீதிமன்ற அனுமதிக்கமைய, குறித்த பால் பைக்கற்று, கடந்த செப்டெம்பர் 13 ஆம் திகதி அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் கடந்த செப்டம்பர் 28ம் திகதி, அது தொடர்பான அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பால் மாதிரியின் சோதனையின் போது, அதில் சயனைட், உலோக விஷம், விசம் கொண்ட கிருமிநாசினிகள், மருந்துகள் எதுவும் கலக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அந்த வகையில் குறித்த பால் பைக்கற்றுகளில் எவ்விதமான விஷம் அல்லது மருந்துகள் கலக்கப்படவில்லை என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பால் பைக்கற்று திறக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment