சட்டத்தரணிகள் சங்க தலைமைப் பதவிக்கு, காலிங்க இந்ததிஸ்ஸ போட்டி
எதிர்வரும் 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைமைப் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
காலிங்க இந்ததிஸ்ஸ தன்னுடைய ஆரம்பக் கல்வியை கேகாலை புனித மரியாள் கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார். தனது கல்விப் பொதுத் தராதர உயர் கல்வியை பூர்திசெய்த அவர் 1982ம் ஆண்டு தன்னுடைய 17வது வயதில் இலங்கை சட்டக் கல்லூரிக்கு தெரிவானார்.
சட்டக் கல்லூரியில் தன்னுடைய கற்றல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய அவர் முதலாம் வருடம் , இறுதி வருடங்களில் முதல் தரச் சித்தியை பெற்றுக்கொண்டதோடு 1985 ஏப்ரலில் நடைபெற்ற இறுதிப் பரீட்சையில் இவர் மாத்திரமே முதல்தரச் சித்தியுடன் முதன்நிலை மாணவராக சித்தியெய்தினார்.
தனது சட்டக் கல்லூரி வாழ்வில் ரோமன் சட்டம், குற்றவியல் சட்டம், சான்றுச் சட்டம் என்பவற்றுக்கான பரிசைத் தட்டிச்சென்ற அவர் இலங்கை சட்டக் கல்லூரியின் Jaycees , வழக்காடு மன்றங்களின் தலைவராகவும் மனித உரிமைகள் அமைப்பின் மாணவ ஆலோசகராகவும் செயற்பட்டார். 1984ம் ஆண்டு அறங்கூறும் அவையத்தோருக்கு உரைத்தற் போட்டியில் (Address to Jury ) பிரகாசித்தமைக்காக சேர்.சிறில் டீ சொய்சா தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
தனது சட்டக் கல்லூரி இறுதிப் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்திசெய்த காலிங்க இந்ததிஸ்ஸ ஜனாதிபதி சட்டத்தரணிகளான எர்ட்லீ பெரேரா , திவங்க விக்ரமசிங்க, டீ.எஸ் .விஜயசிங்க ஆகியோரிடம் கனிஷ்டனாக பயிற்சிபெற்று 1986 ம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
1987ம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக இணைந்த இவர் அங்கு பிரதானமாக குடியியல் சார் வழக்குப் பகுதியில் சேவைபுரிந்ததோடு நாட்டின் முதன்நிலை நீதிமன்றங்கள், மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தோன்றினார். 1986ம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியின் விரிவுரையாளர் குழாத்தில் குற்றவியல் சட்டத்துக்கான இணை விரிவுரையாளராக இணைத்துக்கொள்ளப்பட்ட காலிங்க இந்ததிஸ்ஸ பின்னர் நிர்வாகச் சட்டம், குற்றவியல் சட்டம், சான்றுச் சட்டம், குற்றவியல் நடபடிமுறைச் சட்டம் என்பவற்றுக்கான விரிவுரையாளராக தரமுயர்த்தப்பட்டார்.
கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையின் பரீட்சகராகவும் 2003ம் ஆண்டுவரை கடமையாற்றிய அவர் தியத்தலாவை நிலஅளவை கற்கை நிலையம், சிலோன் ஹோட்டல் பாடசாலை மற்றும் பொலிஸ் உயர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1991ம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து தன்னுடைய சேவையை இராஜினாமாச் செய்த காலிங்க இந்ததிஸ்ஸ தன்னுடைய தனிப்பட்ட தொழில்வாண்மையை ஆரம்பித்தார்.குற்றவியல் சட்டம், சுங்கச் சட்டம், புலைமைச் சொத்துச் சட்டம், கணினிக் குற்றங்கள் மற்றும் விளையாட்டுச் சட்டத்தில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற இவர் இன்று சட்டத்துறையில், நீதித்துறையில் ஏனைய அரச மட்டங்களிலும் பிரகாசிக்கக்கூடிய பலநூறு கனிஸ்டர்களை நாடுபூராகவும் உருவாக்கியுள்ளார்.
தன்னுடைய சட்டத் தொழில் வாண்மையின் ஆரம்ப நாட்கள் முதலே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்படுகளோடு தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்ட காலிங்க இந்ததிஸ்ஸ 1988,1989 ஆண்டு காலப் பகுதிகளில் இளஞ் சட்டத்தரணிகள் குழுவின் ஏற்பாட்டாளராகவும் அதே குழுவின் தவிசாளராக 1997-1998, 2001,2006 காலப்பகுதிகளில் கடமையாற்றினார். 1991ம் ஆண்டு கொழும்பு சட்டச் சங்கத்தின் பத்திராதிபராகவும் 1990-1993 வரை அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் கடமையாற்றினார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக 2003-2004ம் ஆண்டுகளில் கடமையாற்றிய இவர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக 1991, 1994-1997, 2001ம் ஆண்டு காலப்பகுதிகளில் தொழிற்பட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ பல்வேறு அரச பதவிகளையும், பொறுப்புக்களையும் அலங்கரித்துள்ளார். 1994-2000 ம் ஆண்டு காலப்பகுதிகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உறுப்பினராகவும், 1994-1996ம் ஆண்டு காலப் பகுதிகளில் மஹாபொல உயர் கல்வி நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளராகவும் 1993-1995ம் ஆண்டு காலப் பகுதிகளில் மஹாபொல தொழில்வாண்மையாளர் அமைப்பின் ஆலோசகராகவும் , 2002-2003 ம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசியல் அமைப்பு விவகார அமைச்சு, உள் விவகார அமைச்சு என்பவற்றின் சிரேஷ்ட ஆலோசகராகவும், 2004-2006ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை ஸ்ரீ மகாபோதி அமைப்பின் பொதுச் செயலாளராகவும் 2010-2011ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்காலக் குழு உறுப்பினராகவும் 2010ம் ஆண்டு இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் சேவையாற்றினார். ஜெனெரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோரின் கொலைகளை விசாரணைசெய்யும் இரு வேறு ஆணைக்குழுக்களிலும் காலிங்க இந்ததிஸ்ஸ இடம்பெற்றார் என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
உள்நாட்டில் சட்டத்துறையில் பிரசித்திபெற்று விளங்கிய காலிங்க இந்ததிஸ்ஸ அந்நிய நியாயாதிக்கங்களிலும் தோன்றும் வாய்ப்பினைப் பெற்றார். 1999ம் ஆண்டு மொனோக்கோ நகரில் இலங்கைக்கு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்றுக்கொடுத்த சுசந்திகா ஜெயசிங்கவுக்கு எதிராக சர்வதேச மெய்வல்லுனர் அமைப்பினால் நடாத்தப்பட்ட விசாரணைகளில் திறம்பட வாதாடி வெற்றிவாகை சூடினார். அதேபோன்றே இலங்கை கிரிக்கெட் அணியின் மேனாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான ஆட்டநிர்ணய விசாரணைகளிலும், 2011ம் ஆண்டு மஞ்சு வன்னி ஆராச்சிக்கு எதிராக டில்லி, மலேசியா நகரங்களில் இடம்பெற்ற விசாரணைகளிலும் தோன்றி திறம்பட வாதாடினார். இலங்கை கிரிக்கெட் அணியின் பிறிதொரு மேனாள் அணித்தலைவர் சனத் ஜெயசூரியவுக்கு எதிரான சர்வதேச கிரிக்கட் சபையின் விசாரணையிலும் இவர் தோன்றுகின்றார் என்பது கூடுதல் தகவலாகும்.
சிறந்த எழுத்தாளரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ இதுவரை பல்வேறு விடயதானங்களில் 46 புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் குற்றவியல் சட்டம், குடியியல் நடபடிமுறைச் சட்டம், கணினிக் குற்றங்கள், சான்றுச் சட்டம், தடையானைகள், இலத்திரனியல் பரிவர்த்தனை சட்டம், எழுத்தாணைகள்,பினைச் சட்டம் என்பவற்றின் மீதான அவரது நூற்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற சில நூற்களாகவும். பல்வேறு கருத்தரங்குகள்,மாநாடுகள்,பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மாநாடுகளில் வளவளராக கலந்து பாரிய பங்களிப்புச் செய்யும் இவர் இலங்கை சட்டக்கல்லூரியால் ஒழுங்குசெய்யப்படும் சட்டப் பயிலுனர்களுக்கான விசேட கருத்தரங்குகளிழும் தொடர்த்தேர்ச்சியாக பங்களிப்புச் செய்து வருகின்றார்.
இலங்கையில் சட்டக் கல்விக்கும், சட்டத் தொழில்வாண்மைக்கும் பாரிய பங்களிப்பை நல்கிவரும் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புச் சம்மேளனத்தால் " Sustainable Development Goals Role Model Leader " என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment