போலி உம்ரா, முகவர்களிடம் ஏமாறாதீர்கள்...!
குறைந்த கட்டணங்களில் உம்ரா பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்து ஏமாற்றும் உம்ரா முகவர்கள் தொடர்பிலும் ஏற்கனவே முற்பணம் பெற்றுக்கொள்ளும் உம்ரா முகவர்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்குமாறு அரச ஹஜ் குழு மக்களை வேண்டியுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத உம்ரா முகவர்களுடன் பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உம்ரா முகவர்கள் தொடர்பில் அரச ஹஜ் குழுவிற்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறைந்த கட்டணங்களில் உம்ரா பயணிகளை அழைத்துச்செல்லும் முகவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
குறைந்த கட்டணங்களில் பயணிகளை அழைத்துச்செல்லும் உம்ரா முகவர்கள் சவூதி அரேபியாவில் அவர்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்துகிறார்கள்.
உம்ரா பயணத்துக்காக முற்பணம் பெற்றுக்கொள்ளும் முகவர் சில மாதங்களின் பின்பு உறுதியளித்த கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள உம்ரா முகவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்தாலே அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். விசாரணைகளை நடாத்த முடியும். திணைக்களத்தில் பதிவு செய்யாத உம்ரா ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் திணைக்களத்தினால் எவ்வித உறுதிகளையும் வழங்க முடியாது என்றார்.
-Vidivelli
Post a Comment