முஸ்லிம்கள் மௌனம் - அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும், மிகக்கொடூரச் சட்டம்
பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் தேசிய பயங்கரவாதத்தை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையை ஏமாற்றி மீண்டும் 1979 ஆம் ஆண்டை நோக்கி பயணிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்ட மூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படை உரிமைகளை பயங்கரவாதத்தின் கீழ் கொண்டுவர எதிர்பார்க்கும் சட்ட மூலம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்கத்தால் புதிதாக கொண்டுவர எதிர்பார்க்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், 1979 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாகவே அமுல்படுத்தப்பட்டது. ஆனால் அதே அரசாங்கம் குறுகிய காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை உறுதிப்படுத்தி சட்ட பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அவ்வாறு சட்டபூர்வமாக்கப்பட்டது மட்டுமின்றி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களையும் ஒழிப்பதற்கென தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது.
இந்நிலையினை மீண்டும் உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஜே.ஆர். ஜயவர்தன யுகத்தில் காணப்பட்ட சர்வாதிகார நிலையை நாட்டில் உருவாக்கி குற்றம் செய்யாதவர்களையும் குற்றவாளிகளாக மாற்றியமைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச்செல்லும் அரசாங்கத்தின் நோக்கத்தை மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
1979 ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் நிலைகொண்டிருக்காவிட்டாலும் அன்று ஆட்சியில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களை ஒழிப்பதற்கு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அன்றைய அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இந்நிலையில் முப்பது வருடகால யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தேசிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடமும் நாட்டு மக்களிடமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியினை வழங்கியிருந்தது. இதற்கிணங்கவே அரசாங்கம் தற்போது பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழித்தல் என்ற நோக்கத்தில் மீண்டும் ஜனநாயகத்தினை வீணடித்து பயங்கரவாதத்தை உருவாக்கும் முயற்சியாக இதனை செய்ய முயற்சிக்கின்றது. பயங்கரவாததடைச்சட்டத்தை ஒழிப்பதாக கூறி பழைய சட்டத்தில் உள்ள ஒரு சில ஏற்பாடுகளை நீக்கி அதற்கு மாறாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தில் மேலும் பயங்கரவாதத்தினை உருவாக்கும் வகையிலும் மக்களின் உரிமைகளுக்கு பாரதூரமான பாதிப்பினை ஏற்படுத்தி மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றும் வகையிலுமான சட்ட மூலத்தினையே அரசாங்கம் தயார் செய்துள்ளது.
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான மாற்றுச்சட்டத்தின் கீழ் நிரபராதி ஒருவரையும் குற்றவாளியாக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் குற்றவாளியொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வாக்கு மூலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளும் வகையிலும், குறித்த குற்றவாளியொருவரை 18 வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி சிறையிலிடுவதோடு மீண்டும் சிறையடைப்பு காலத்தை அதிகரிக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் அடிப்படை சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டு சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும் வகையிலான புதிய ஏற்பாடுகள் உள்ளன.
நாட்டில் உள்ள பிரச்சினைகளையும் நாட்டின் பாதுகாப்பையும் பேணுவதற்கு தற்காலத்தில் நடைமுறையில் உள்ள சட்ட நடைமுறைகள் போதுமானதாகும். இதற்கென பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவருவதற்கோ மனித உரிமைகள் பேரவை கட்டளையிடும் வரை காத்திருக்கவோ வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாடு 1979 ஆம் ஆண்டை நோக்கி நகர இடமளிக்கப்போவதில்லை. புதிய பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படவேணடும் என்று குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் மௌனம்
இந்தச்சட்டம் ஒட்டுமொத்த இலங்கைக்கும் பாதகமானது என்ற போதிலும், இதுவரை முஸ்லிம் அரசியல்வாதிகளோ அல்லது முஸ்லிம் அமைப்புக்களோ இச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல் மௌனம் காத்து நிற்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment