Header Ads



மகிந்தவுக்கு ஆதரவாக எம்.பி.க்களை விலைக்கு வாங்க சீனா திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு நிதியைச் செலவிடுவதை சீனா கைவிட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவை நீக்கும், கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டமானது ஒரு அனைத்துலக சதிவேலை.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு நிதியளிக்க வேண்டாம் என்று சீன அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

பூகோள அதிகார சக்தி, நாடுகளை விலைக்கு வாங்க முனைகிறது,  இது உண்மை.

அதனை அவர்கள் பல நாடுகளில் செய்திருக்கிறார்கள். கானா, துனீசியா, அங்கேனாலா, பபுவா நியூகினியா, மியான்மார் போன்ற நாடுகளில் இதனைச் செய்திருக்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்தத் தருணத்தில் நான்கு அல்லது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.

இதேவேளை, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நேற்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

மலையக மக்கள் முன்னணியின், இராதாகிருஸ்ணனும், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும், மகிந்தவின் பக்கம் செல்லவுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.