என்னை அறையொன்றில் அடைத்து, கொலை செய்ய முயற்சித்தனர் - அர்ஜூன
வாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன் என பெற்றோலிய வள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
என்னை அறையொன்றில் அடைத்து கொலை செய்ய முயற்சித்தனர். கலகம் விளைவித்த நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஆயுதங்களை பிடுங்கி எடுக்க முயற்சித்தனர்.
அதனை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நான் வெளிநாடு சென்று இன்று -28- காலை நாடு திரும்பினேன். எனது உத்தியோகபூர்வ இல்லத்தின் சாவி பெற்றோலியத் திணைக்கள நான்காம் மாடியில் காணப்பட்டது.
காலையில் அமைச்சு செயலாளரிடம் அறிவித்துவிட்டு நான் அமைச்சிற்கு சென்றேன். இதன் போது மலர்மொட்டு நாகரசபை உறுப்பினர் ஒருவர் எனக்கு தடை ஏற்படுத்தியிருந்தார்.
எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை விரட்டியடித்தார், பின்னர் பணி நீக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தடிகளுடன் ஆட்களையும் திரட்டிக் கொண்டு என்னைத் தாக்க வந்தார்.
என்னை அறையொன்றில் போட்டு பூட்டி வைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மரண பயம் முதல் தடவையாக என் வாழ்க்கையில் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment