புலம்பெயர் தமிழர்கள் இனி, யாழ் - பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்
-பாறுக் ஷிஹான்-
புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்ததோடு கனடா தமிழ் கல்லூரி முதன் முறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் விசு துரைராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் துரைராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தங்களுடைய அதாவது B.A, M.A வகுப்புகளை அங்கே எந்தெந்த நாடுகளில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அந்தந்த நாடுகளில் இருந்து அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே யாழ்.பல்கலைக்கழகத்தின் சார்பாக B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அத்தோடு கனடா தமிழ் கல்லூரி முதன் முறையாக யாழ். பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள். எதிர்வரும் மாதம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
குறிப்பாக நானும் இலங்கை கிளைத் தலைவர் செந்தில்வேல் அவர்களும் இரு நாட்களுக்கு முன்னதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்தோம் இந்த சந்திப்பிலே கலைப்பீடாதிபதி தமிழ்த்துறைத் தலைவர் போன்றவர்களும் இருந்தார்கள்.
குறிப்பாக நாங்கள் ஒரு சில விடயங்களை துணைவேந்தருக்கு தெளிவுபடுத்தினோம். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறை இருக்கிறது இந்துநாகரிகத்துறை இருக்கிறது. பொருளியல்துறை இருக்கிறது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுத்துறை இங்கில்லை.
உலகளவிலே தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு துறை இருப்பது அவசியம் என்பதை நாங்கள் துணைவேந்தருக்கு தெளிவுபடுத்தினோம். அதாவது மருகிப்போகின்ற தமிழ் பண்பாட்டு விழுமியங்களை எங்களுடைய தமிழர்களுக்கு தெரியப்படுத்தவும் அவர்கள் அதன் மீது இருக்கின்ற அந்த ஆர்வத்தையும் அந்த விருப்பத்தையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளவும். யாழ். பல்கலைக்கழகத்திலே தமிழ் பண்பாட்டியல்துறை என்கின்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கூடாக அருகிப்போயிருக்கின்ற தமிழ் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒரு உருவம் கொடுத்து அந்த விழுமியங்களை வளர்த்தெடுக்கின்ற அந்தப் பணியை செய்வதற்கு யாழ். பல்கலைக்கழகம் ஓரளவு அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத் தான் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தனது பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது என்றார்.
Post a Comment