ரிஷாட் அப்படிச் சொன்னாரா..? ராஜிதவை தொடர்புகொண்டு கேட்கலாம்...!
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களில் 800 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
மேற்சொன்னவாறு கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர் நடந்து கொண்டிருந்தால் அது ஒரு ‘சமூகத் துரோகம்’, ‘காட்டிக் கொடுப்பு ‘என்ற எனது ஸ்திரமான நிலைப்பாட்டுடன் குறித் அமைச்சரவை அமர்வில் கலந்து கொண்ட பல அமைச்சர்களை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் அனைவரும் ஒன்றுபட்ட கருத்தையே என்னிடம் தெரிவித்தனர்.
அதாவது, ‘கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் அவ்வாறு எந்தக் கருத்துகளையும் அங்கு தெரிவிக்கவில்லை. பொதுவில் இவ்வாறனதொரு விடயம் குறித்து அங்கு பேசப்படவும் இல்லை . குழாய் மூலமான நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மட்டுமே அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதற்குப் பலரும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இது தவிர எதுவுமே நடக்கவில்லை’ என்று தெரிவித்தனர்.
இன்று (26) சற்று நேரத்துக்கு முன்னர் (பகல் 11.50 மணி) அமைச்சரவையில் அங்கம் பெறும் சக்திமிக்க, மற்றொரு சிரேஷ்ட சிங்கள அமைச்சரை தொடர்பு கொண்டு நான் இது தொடர்பில் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். ஆனால், நீங்கள் குறிப்பிடும் விடயம் எதுவும் நடைபெறவில்லையே. இது பச்சைப் பொய் (பட்டபல்பொறு) என்று என்னிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் நான் தொடர்பு கொண்ட அமைச்சர்களின் குரல்வழிப் பதிவையோ அல்லது அவர்களது பெயர்களையோ என்னால் வெளியிட முடியாதுள்ளதனைக் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறறேன்.(எவரும் விரும்பவில்லை)
இந்த விடயத்தில் சிலர் என்னை ‘இவர் ரிஷாத்தின் ஆள்’ என்று நிச்சயம் அடையாளப்படுத்தி பின்னூட்டங்களைப் பதிவிடலாம். பரவாயில்லை. அதேவேளை, அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் மீதும் இவ்வாறானதொரு அபாண்டம் சுமத்தப்பட்டிருந்தால் அவருக்காகவும் நான் போராடியிருப்பேன்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சிங்களப் பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. நீர்வழங்கல் அமைச்சுடன் தொடர்புடைய ஒரு தொழிற் சங்கம் அமைச்சர் ஹக்கீம் மீது பாரிய குற்றச்சாட்டைச் சுமத்தி அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதாவது, அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது அமைச்சில் முஸ்லிம்களுக்கு அதிகளவில் தொழில்வாய்ப்பை வழங்குவதாகவும் சிங்களவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அந்த தொழிற் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
உண்மைக்குப் புறம்பான இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த தொழிற்சங்கத் தலைவரை நான் தொடர்பு கொண்டு எனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்ததுடன்’தினேஷ் குணவர்தன இந்த அமைச்சின் அமைச்சராக இருந்த போது எத்தனை முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கினார், எத்தனை சிங்களவருக்குத் தொழில் வழங்கினார் என்பதனை நீங்கள் ஆராய்ந்து விட்டு கௌரவ ஹக்கீம் அவர்கள் மீது குற்றம் சாட்டுங்கள்’ என்று கூறினேன். (இது தொடர்பான பதிவையும் எனது முகநூலில் ஆதாரத்துடன் முன்னர் பதிவிட்டேன்) அதன் பிறகு அவர்கள் எனது நியாயத்தைப் புரிந்து கொண்டனர் என்ற விடயத்தையும் இங்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கெளரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் மீது சுமத்தினாரா என்பதனை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்னவை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
Post a Comment