Header Ads



புலமைப் பரீட்சை (சிறுகதை)

-கினியம இக்ராம் தாஹா

வழமை போல் சூரியன் தன் கதிர்களை தரணியெங்கும் பரப்பிக்கொண்டிருந்தான். கதீஜா வீட்டு முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.பாடசாலை விடுமுறை தினம் என்பதால் மகன் ஆசிப்  இன்னும் புரண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.கணவர் மஜீத் கிணற்றடியில் மோட்டார் சைக்கிளை கழுவி துடைத்துக்கொண்டிருந்தான். 

“விசேட செய்திகள்..இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பெறுபேறு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது!" என்ற  அடுத்த வீட்டு வானொலியில் ஒலித்த செய்திஇ  கதீஜாவின் காதில் பட்டதும் அப்படியே செய்த வேலையை கைவிட்டு.. என்னங்க என்னங்க..என கணவனிடம் ஓடோடி வந்தாள்.


என்னங்க ஆ..நீங்க இங்கதான் நிகிகிறீங்களா...?
“ஏம்மா பட படப்புடன் ஓடி வர்ர..என்ன விசயம்..?”
“எல்லாம் சந்தோசமான விசயம் தான்..இப்போ நிவுஸ்ல சொன்னாங்க ஸ்கொலசிப் ரிசல்ட் வந்திட்டாம்...இன்டர்நெடல பார்க்கலாமாம்... கதீஜா சதோசத்துடன் கணவனிடம் சொன்னாள்
“அடட....வந்திட்டுதா....அப்போ சதோசம் தான்... மகன்ட இன்டெக்ஸ் நம்பர் தாங்க நான் கொமினிகேசன் போய் பார்த்திட்டு வாரன்....
“போன்லயும் பார்க்க ஏலும் போல..அன்னிக்கு ஹமீதா அன்டி சொல்லிச்சு...”

“போன்ல பார்க்கிர இலவெல்லாம் தெரியாது புள்ள..நம்ம புள்ள படிச்ச அளவு நான் படிச்சிறுந்தா எங்கயாவது ஒபீஸ்ல தானே வேல பார்த்து இருப்பன்...ஹம்..நான் கொமினிகேசன் ல பார்க்கிறன்... எங்க மகன்...அவன எழுப்பி விடுங்க...

சரி சரி நீங்க பார்த்திட்டு அவசரமா வாங்க...முடியும்ன பிரின்ட் அவுட் வாங்கிட்டு வாங்க...அப்போ எங்க சின்னவன்ட கெட்டி தனத்த அக்கம் பக்கம் எல்லாம் காட்டலம்... இப்போ அவனுக்கு வாக்கு கொடுத்த மாதிரி கிப்ட் பைசிகிளும் வாங்கி கொடுக்கனனும்...”
“ஓ..கட்டாயம் நான் போயிட்டு வர்ரன்..வாயிக்கு ருசியா என்ன சரி சமைச்சு வைங்க...!”
கணவன்  மஜீதின் பைக் கொமினிகேசனை நோக்கி சீரிப் பாய்ந்தது...

“தங்க ராசா எழும்புங்கட...உங்கட ரிசல்ஸ் வருது....அவசரமா எழும்புங்க..என மகனை எழுப்பியவாறு அடுக்களைக்குள் நுழைந்தாள் கதீஜா.
வேண்டா வெறுப்புடன் கைகளை முறுக்கி சோம்பல் விட்டவறு மகன் இம்ரான் எழும்பினான். அவன் கடந்த இரண்டு மாதங்களாகத் தான் .சுதந்திரம் என்ற சுவாசக் காற்றை நிம்மதியாக சுவாசிக்கிறான்.

ஆம்.அவன் ஐந்தாம் ஆண்டு மாணவன்.ஐந்தாம் ஆண்டு என்றால் கேட்கவா வேண்டும்?அந்த வகுப்பை அடைந்து விட்டால் அனைத்து மாணவர்களும் ஒரு தேர்தல் வேட்பாளர்கள் போன்றாகிவிடுகின்றனர்இஅவர்கள் விரும்பியோ விரும்பாமலோ போட்டித்தன்மைக்கு உந்தப் படுகின்றனர்.நான்காம் ஆண்டிற்கு சித்தியடைந்து விட்டால்  அடுத்த இலக்கு புலமைப் பரீட்சை.அதனால் நான்காம் ஆண்டு முதலே கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்தப்டுகின்றனர்இசுற்றித் திரியும் சின்னம் சிறுசுகள்.அவர்களுடைய சக்தியைத் தாண்டிய அறிவு அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது.தனது விருப்பு வெறுப்புக்கள் ஓரங்கட்டப் பட்டுகிறது.

இம்ரானும் அதற்கு விதிவிலக்கல்ல.நான்காம் ஆண்டை அவன் எட்டிப்பிடித்தது முதல் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலசிப் பிற்காக அவனின் பெற்றோர்களால் அடித்தளமிடப்பட்டது.
ஐந்தாம் ஆண்டை அடைந்ததும் இம்ரான் பம்பரமாய் சுழன்றான்.இல்லை ..இல்லை பெற்றோரால் பம்பரமாய் சுழற்றப்பட்டான் என்றே சொல்லலாம்.அவனும் படிப்பில் திறமைசாலி தான்.இருந்தாலும்.தான் சுதந்திரம் பறிக்கப்பட்டு முழுமூச்சாக படிப்பு படிப்பு என்றிருந்ததால் மனதில் சொல்லிக்கொள்ள முடியாத வெறுப்பும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்தது.
பாடசாலையில் படிப்பு..பின்நேர பிரத்தியேக வகுப்பு என்று ஆரம்பித்த இம்ரானின் வாழ்க்கை சனி-ஞாயிறு பிரைவட் டிவுஸன்..இரவில்  வீட்டில்  மசூத் மாஸ்டரின் தனி வகுப்பு..இது தவிர செமினார்...ஓய்வு நேரங்களில்  கணிப்பீட்டு பரீட்சைப் பேப்பர்களை அவன் தாய் கதீஜா செய்யக் கொடுப்பாள்..காலை எழுந்தால் இரவு 10 மணிக்கு தூங்கும் வரை படிப்பு படிப்பு என்றே அவனது வாழ்க்கை நகர்ந்தது.ஓய்வு நேரம்.. விளையாட்டு எல்லாம் தடைப்பட்டது.மனதில் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும் எல்லாம் கட்டுப் படுத்தி படிப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.ஒரு சில நேரங்களில் அவனையும் மீறி கொஞ்ச நேரம் விளையாடினால்..அல்லது டீவி பார்த்தால்..

"டேய்..என்னட படிப்புள மண்ண அள்ளிப் போடப் போறியா...நஸீமா அன்டியாங்கட மவள் மாஜிதா எப்படிப் படிக்கிறா தெரியுமா....ஹம்...போய் எக்ஸாம் பேபர் எடு..நான் வாரன்..." என கதீஜா கத்தும் போது மீண்டும்  படிப்பு தேசத்திற்குள் நுழைந்துவிடுவான்.
கதீஜா- மஜீத் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.என்ன கஸ்டம் என்றாலும் மகன் இம்ரானுக்கு எந்த கஸ்டத்தையும் வைக்கவில்லை.எல்லாவகையிலும் இம்ரானின் படிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

பாடசாலையிலும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் நல்லதொரு நிலமைக்கு கொண்டுவரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மும்முறமாக இருந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரீட்சை முடிந்து விட்டது.அதன் பின்னர் தான் பிள்ளைகளுக்கு ஒரு விடுதலை போன்ற நிம்மதி.சுதந்திரப் பறவைகளாய் தாம் விரும்பியவாறு சிறகடித்துப் பறந்தனர்.இம்ரானைவிட அவனுடைய பெற்றோரும் ஆசிரியர்களும் அவனை விசேட சித்திபெறும் மாணவர்களில் ஒருவனாக எதிர்பார்த்திருந்தனர்.அதனால் இம்ரானும் சும்மா நிற்கவில்லை.பரீட்சையில் சித்தியடைந்தால் புதிய சைக்கிள் ஒன்று வாங்கித்தரும் படி கேட்டான்.அதற்கும் பெற்றோர் சம்மதித்தனர்.

பல பெற்றோர்களின் ஆசிரியர்களின் மாணவர்களின் பல கனவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பெறுபேறு வெளியாகிறது.
கணவன் மஜீதின்  பைக் வரும் சத்தம் கேட்டதும் கதீஜா சந்தோசத்துடன் ஓடோடி வந்தாள்..."என்னங்க..எத்தன மார்க்ஸ்?"
மஜீத் மெளனமாக உள்ளே வந்தான்..." ஏ..ஏன்னங்க.. உங்களத்தான்.."
மஜீத் எதுவும் பேசவில்லை.கையிலிருந்த  பிரின்ட் எடுத்த ரிஸல்ஸ் பேப்பரை மனைவி கையில் கொடுத்தான்.
அப்போது இம்ரானும் அங்கே ஓடோடி வந்தான்....அட  ரிஸல்ஸ் வந்திருச்சா...
பேப்பரைப் பார்த்த...கதீஜா..."ஐயோ...என்னடா இது??? வெறும் 100 மார்க்ஸா?  எல்லாம் போச்சே? ஐயோ..."
என கத்திவிட்டாள்.

என்ன நூறா?..இம்ரான் பேந்தம் பேந்த விளித்தான்..
மாடு..மாடு எங்கட மானத்தையே வாங்கிட்டீயே... எனக் கோபத்துடன் கத்திய கதீஜா ஆத்திரம் தாங்க முடியாமல் தபாரென இம்ரானின் முதுகில் ஓங்கி அடித்தாள்.... "ஆய்..உம்மோ" என வலி தாங்க முடியாமல் அழுதுகொண்டே வீட்டிற்குள் ஓடினான்.
மவனுக்கு செலவளிச்ச காசெல்லாம் அனியாமா போச்சு..சொல்லி வேல இல்ல...மஜீத் மன உளைச்சலுடன் மனைவியிடம் சொன்னான்.
காச விட எங்கட கெளரவம்...இப்போ எல்லோரும் எங்கள் கிண்டல் பண்ணுவாங்களே..இப்போ இப்படி ஊருக்கு முகம் காட்டுறது...இந்த எருமைக்கு தின்னக் கொடுத்தது மிச்சம்..எரும...எரும..பட்டினி போடனம்.. கழுத...

இருவரும்  ஒருவர் மாறி ஒருத்தர் ஆத்திரம் அடங்கும் வரை இம்ரானை திட்டிக்கொண்டிருந்தனர்.இம்ரான் கட்டிலில் புரண்டு அழுதுகொண்டிருந்தான்.
அதே நேரம் மஜீதின் நண்பன் ஆரிப் அவருடைய மகன் சமீருடன் வந்தார்.மனசுக்குள் குழப்பம் ஆத்திரத்துடன் அவர்களை வரவேற்று உற்கார வைத்தனர்.இம்ரானைக் காணாத சமீர்.."அங்..அங்கில்..எங்..எங்க இ..இம்ரா..."என தட்டுதடுமாறிக் கேட்டான். சமீர்  இஇம்ரானின் வயதை எட்டிப்பிடித்தாலும் மூளை வளர்ச்சி குறைவு என்பதால் சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருந்தான்..

கலகலப்பு இல்லாமல் வேண்டா வெறுப்புடன் வாடிய முகத்துடன் இருந்த கதீஜா..மஜீதிடம் என்ன டல்லா இருக்கீங்க..ஏதும் சிக்கலா என ஆரிப் கேட்டார்..
“அது சொல்லி வேல இல்ல மச்சான்...இன்னிக்கு ஸ்கொலசிப் ரிசல்ஸ் வந்திருக்கு... எங்கடவன் பாஸ் பன்ன இல்ல
“ஓஹ் அத டல்லா இருக்கீங்க...?
“ஓ நானா..எவ்வளவு எதிர்பார்ப்பொட இருந்தம்...நாங்க அவனு இந்த ரெண்டு வருசமா டிவுசன் டிவுசன்னு எவ்வளவு செலவளிச்சு இருக்கொம்...
“பாரு மச்சான்..புக்ஸ்..எக்ஸாம் பேப்பர்...நிறைய கிளாஸ் செமினார்.. திங்க இல்லாட்டியும் அவன்ட படிப்புக்கு குறைவைக்க இல்ல...கழுத அவனுக்கு அடிச்சும் போதாது...”

“ஆரிப் நானா..எங்கட கவலய யார்கிட்ட சொல்ல..வெக்கம் ஒருபக்கம்...இந்த கொஞ்ச  நேரத்துக்குள்ள எத்தன பேரு கோள் எடுத்து ரிஸல்ஸ் கேட்டுட்டாங...வெளிய தல காட்டவே வெக்கம்..ஹம்..”
ஆரிபிடம் இருவரும்  தமது கவலையை கொட்டிகொண்டிருந்தனர்...
மெளனமாக கேட்ட ஆரிப்.
எங்க பாருங்க...தங்கச்சி...மச்சான் மஜீத் நீயும் தான்.டோன்ட் வொரி.டேக் இட் ஈஸி...இதெல்லாம் பெரிசா போட்டு அலட்டிக் கொள்ளாதீங்க...ஸ்கொலசிப் இப்போ ஒரு வியாதியாவும் வியாபாரமாவும் மாறிடிச்சு...இது நல்ல நோக்கத்திற்ற்கு ஆரம்பிச்சது...இன்னிக்கு அதல எத்தன பிள்ளகள்ட மன்சு வாழ்க்க பாதிக்குது..

ஸ்கொலசிப் கிளாஸ் நடக்கிறதால பிள்ளகளுக்கு நல்ல அறிவு வளருது...சொல்ல போனால் அதுகளுக்கு தெரிந்த  அறிவு எங்களுக்கு தெரியாது..அந்த அளவு கெட்டித்தனமா இருக்கு..போட்டித்தன்ம இருக்கனும்..அதனால தான் பிள்ளகள் நல்லா படிக்கிறாங்க...

வெற்றி -தோல்வி சகஜம்...தோல்வி தான் வெற்றியின் அடுத்த கட்டம்...அடுத்தவர் சொல்ற கதகள கேக்க வேணாம்..வரட்டு கெளரவம் பார்க்க வேணாம்..புள்ளய திட்டாதீங்க...அவன தட்டிக்கொடுங்க...அவன்ட லைப் நல்லா வரும்..

இப்போ என்ட மகன் சமீர்...அவனுக்கு ஒன்னும் விளங்காது கிரேட் 6 படிக்கனும்..ஆனா அவன்ட மூள வளர்ச்சி குறைவு..அவன குணப்படுத ஏழாது..அது எங்களுக்கு நல்லா தெரியும்...ஆனா அவன நாங்க ஸ்கோல் அனுப்புறம்..

நான் வேலைக்குப் போனாலும் என்ற வைப் டேய்லி ஸ்கூல் கூட்டி போய் விட்ரா...திருப்பி கூட்டி வர்ரா...அவ வீட்டு வேள பார்க்கனும்..இன்னும் சின்ன பிள்ளகள் 2 இருக்கு..அதுகளயும் பார்த்துக் கொண்டு இந்த பிள்ளய தவறாம ஸ்கூல் கூட்டி போறா...எவ்வளவு கஸ்டம்..அதுக்காக பிள்ள படிக்கிற இல்லன்னு சும்மா இருக்கலாமா? ஏதாவது சின்ன அறிவாவது கிடைக்கும் தானே..

மகனுக்கு செலவளிச்சது வீணாகிட்டுதுன்னு நினைக்க வேணாம்.அவனுக்கு ஏதோ நல்ல அறிவு கிடச்சிருக்கு..ஸ்கொல சிப்போட படிப்பு நிக்க இல்ல...மிச்சம் பேரு ஸ்கொல சிப் வரத்தான் பிள்ளகள விரட்டி விரட்டி படிக்க வைப்பாங்க...அதுக்கப்புறம்...?? அவர்களும் அவர்களின் பாடும். அது தவறு 
படிப்பில் போட்டி இருக்கத்தான் வேணும்.பொறாமை இருக்கக் கூடா..படிப்பில் கட்டாயம் கெட்டித்தனம் வேணும்..பிள்ளயல் நல்லா படிக்கணும்..பெத்தவங்களும் நல்ல அக்கரையா ஒத்துழைக்கணும்... ஆனா சினேக பூர்வமா செயல் படணும்.. 

பிஞ்சு மனச நோகடிக்காதீங்க..நாட்ல பல  விபரீதிங்கள் நடந்தவை கேட்டிருக்கோம் தானே..பொறுமையா நிதானம நடந்து கொள்ளுங்க..பிள்ளய அனுசரிச்சு அன்பா  இருங்க,, இப்போ மகனுக்கு ஆறுதலா இருங்க..எல்லாம் சரி வரும்..

கதீஜா கொடுத்த டீயை சுவைத்த படி ஆரிப் இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தார்.ஆனால் இதை கதீஜாவும் மஜீதும் புரிந்து கொண்டார்களா..இது போன்ற பெற்றோர் புரிந்துகொள்வார்களா என்பதை காலம் தான் பதில் சொல்லும்?
(முற்றும்)

No comments

Powered by Blogger.