வசீம் கொலை பற்றி கூறியதும், மஹிந்த பயந்துவிட்டார், நான் சிரந்தியை கைதுசெய்வதாகக் கூறவில்லை
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சுகாதார, தேசிய வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மினுவாங்கொட ஹெரம்பெல்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புதிய சேவைகள் நிலையம் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோரின் தலைமையில் ஞாயிறு காலை திறந்து வைக்கப்பட்டது. மினுவாங்கொட நகரிலிருந்து வாகன அணிவகுப்புடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டார்கள்.
இந்த சேவை நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அமைக்கப்பட்டதாகும். இந்நிகழ்வில், மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், உலர் உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அங்கு பேசிய சுகாதார அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தத்தில் வெற்றிபெற்ற பின் நான் கூறியவற்றை செயல்படுத்தியிருந்தால் இன்றும் அவர்தான் ஜனாதிபதி.
நான் கூறியது இன்று ஞாபகம் வரும். நான் அவற்றை அவரது முகத்திற்கே கூறினேன். நான் கொலை கலாசாரத்துக்கு எதிரானவன். ரணசிங்க பிரேமதாசவினதும் முன்னாள் ஜனாதிபதியினதும் காலத்தில் கொலை கலாசாரத்துக்கு எதிராக நான் நடவடிக்கையில் ஈடுபட்டேன். ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க, தாஜுதீன் ஆகியோர் கொலை செய்யப்பட்டார்கள். அவற்றுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன்.
இன்றும் கொலை கலாசாரம் செயல்படுத்தப்பட்டால் அதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பேன். நாம் ஜனாதிபதி பதவிக்கும் பிரதமர் பதவிக்கும் நல்ல தலைவர்களை நியமித்தோம். அவர்கள் அருகில் இருப்பவர்களே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். தலையிலுள்ள தெள்ளைப் போன்று அவர்களின் தலையைக் கடிக்கின்றார்கள். சிலர் 2015 இல் ஏற்பட்ட புரட்சியைப் பற்றி அறியாதவர்கள். வெற்றியின் பின்னர் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
இந்தியாவிலும் அதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்தது. இலங்கையிலும் அவ்வாறான நபர்கள் இருக்கின்றார்கள். பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கின்றார்கள். பெயர் பெறுவதற்காக வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் முடிவு எடுக்க வேண்டும். ஜனவரி 8 ஆம் திகதி புரட்சியை அழிக்க நினைக்கின்றார்கள்.
நாம் எமது உயிரை மதிக்காது அந்த புரட்சியை செய்தோம். தலைவர்களுக்கும் அது மறந்து போயிருக்கும். அரசாங்கத்தின் ஒற்றுமையை குலைப்பவர்கள் துரோகிகள். சில நாட்களின் பின்னர் அந்த துரோகிகளை இனங்காட்டுவேன். சுண்ணாம்பு பூசுபவர்களும் இருக்கின்றார்கள். நானும் சம்பிக்கவும் இணைந்து பொலிஸ் நிதி குற்றப்பிரிவின் மூலம் ராஜபக்ஷக்களை கைதுசெய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நான் தாஜுதீன் கொலை குற்றவாளிகளைக் கைதுசெய்ய போவதாகவே கூறினேன். முன்னாள் ஜனாதிபதி பயந்துவிட்டார். நான் அவரது மனைவியை கைதுசெய்வதாகக் கூறவில்லை. ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களை கைது செய்வதாக நான் கூறினேன். முன்னாள் ஜனாதிபதிக்கு தொடர்பில்லை என்றால் அவர் பயப்படத் தேவையில்லை. ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியும் நியாயம் வேண்டி நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் கப்பம் கேட்டு 11 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.
நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அவர்களில் வைத்தியதுறை மாணவர் ஒருவரும் அடங்குகின்றார். ஆனால், அது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இராணுவ வீரர்கள் எனக் கூறுகின்றார்கள். தற்போதைய இராணுவத் தளபதி இராணுவ வீரர்கள் கொலைகாரர்களாகமாட்டார்கள் எனக் கூறுகின்றார்.
இதனைப் புரியாதவர்கள் எமது தரப்பிலும் இருக்கின்றார்கள். இந்த 11 பேரையும் கொலை செய்தவர்களை நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நாம் பாதை மாறுவதிலிருந்து, கொலை குற்றம் வரை சட்டம் சரியாக செயல்பட வேண்டும்.
நாம் வழங்கிய சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு ஜனாதிபதியையும் பிரதமரையும் ஏசுகின்றார்கள். ஆனால் நாம் மக்களின் சேவைகளை நிறைவேற்றி மக்களுக்கு சுதந்திரத்தை அனுபவிக்க வழிசமைப்போம். ஒவ்வொருவரும் மோதலில் ஈடுபடுவதால் பலன் இல்லை. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எதிராக கதைப்பதனால் எதுவித பிரயோசனமுமில்லை மக்களுக்குப் பணியாற்ற, மக்களின் நன்மைகருதி ஒன்றாக இணையுங்கள்.
இன, மத, குல பேதமின்றி நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யுங்கள். நல்லாட்சி புரிய வந்தால் தலைவர்கள் நல்லாட்சியில் ஈடுபடவேண்டும். வேறு ஆட்சி செய்ய வேண்டாம். அவ்வாறான பயணம் தோல்வி அடையலாம் என்றார்.
நல்லாட்சிக்கு வஸீம் தாஜுடீன் கொலை வழக்கு = பிச்சைக்காரனுக்கு புண்
ReplyDelete