சீனாவினால் விரட்டப்பட்ட அமெரிக், போர்க் கப்பல் இலங்கையர்களை காப்பாற்றியது (படங்கள்)
நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில், தத்தளித்த ஏழு சிறிலங்கா மீனவர்களை அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று காப்பாற்றி சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.
சான்டியாகோவை தளமாக கொண்டு செயற்படும்- அமெரிக்க கடற்படையின், 7 ஆவது கப்பல்படைப் பிரிவின் USS Decatur என்ற நாசகாரி கப்பல், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது,
இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றில் இருந்த சிறிலங்கா மீனவர்கள் உதவி கோரினர்.
இதையடுத்து, அமெரிக்க நாசகாரி கப்பலில் இருந்து சிறிய படகு ஒன்று, அந்த மீன்பிடிப் படகை நெருங்கிச் சென்றது.
மீன்பிடிப் படகில் இருந்து கடலில் குதித்து நீந்திச் சென்ற இரண்டு மீனவர்கள், சிறிய படகு மூலம் மீட்கப்பட்டு அமெரிக்க நாசகாரி கப்பலில் ஏற்றப்பட்டனர்.
அங்கு அவர்களிடம் விசாரித்த போது, தமது படகு செயலிழந்திருப்பதால், கரை திரும்ப முடியாதிருப்பதாக தெரிவித்தனர். சிறிலங்கா கடற்படையினருக்கு தகவல் அளிக்குமாறும் அவர்கள் கோரினர்.
இதையடுத்து, ஏழு சிறிலங்கா மீனவர்களுக்கும், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அளித்த அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையினருக்கும் தகவல் அனுப்பினர்.
மறுநாளான திங்கட்கிழமை சிறிலங்கா கடற்படையின் ‘ஜயசாகர’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், சிறிலங்கா மீனவர்கள் ஏழு பேரையும், அவர்களின் படகுகளையும் அமெரிக்க கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்று., கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிலங்கா மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படையின் USS Decatur நாசாகாரியே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தென் சீனக் கடலில் சீனக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் மோதுவது போல நெருங்கி வந்து விரட்டப்பட்டது.
இந்தச் சம்பவத்தினால் அமெரிக்கா- சீனா இடையில் முறுகல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment