அலைகடலெனத் திரண்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் மைத்திரி - மஹிந்த அணி அதிர்ச்சி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டக் கோரியும் ஐ.தே.கவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரண்டு ரணிலின் கரங்களை பலப்படுத்தியதை அடுத்து மைத்திரி - மஹிந்த அணியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று அறியமுடிகின்றது என தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், அரச கட்டடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடைவிதித்தும் நீதிமன்றத் தடை உத்தரவைப் பொலிஸ் பெற்றிருந்தது.
அத்துடன், பொலிஸார் 2000 பேரும், விசேட அதிரடிப் படையின் 10 அணிகளும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் நீர்ப்பீரங்கி வாகனங்களும் ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், எதிர்பார்க்கப்பட்டதை விட பெருந்தொகையான ஐ.தே.க ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் அணி திரண்டதையடுத்து மைத்திரி - மஹிந்த அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து தனது சகாக்களுடன் மஹிந்த நேற்றிரவு கலந்துரையாடி உள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
Post a Comment