Header Ads



என் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, காழ்ப்புணர்வுடன் கூடிய விசமப்பிரசாரமாகும் - கல்முனை முதல்வர்

இஸ்லாமாபாத் வீடமைப்புத் திட்ட கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அர்த்தமற்ற விஷமப் பிரசாரமாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"கல்முனை இஸ்லாமாபாத் வீடமைப்புத் திட்டமானது ஒரு தொடர்மாடி (Condominium) வீட்டுத் திட்டமாகும். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள இவ்வீட்டுத் திட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்கென ஒரு சபை அதன் குடியிருப்பாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த முகாமைத்துவ சபையானது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த முகாமைத்துவ சபையின் தலைவராக பதவி வழியில் கல்முனை பிரதேச செயலாளர் இருப்பார். ஏனைய பொறுப்புகளுக்கு குடியிருப்பாளர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பார்கள்.

அந்த சபையானது மலசல கூட கழிவகற்றல், பொதுவான மின்சாரக் கட்டணத்தை செலுத்துதல், வடிகான்கள் மற்றும் பூங்காக்களை பராமரித்தல் போன்ற கடமைகளை மேற்கொள்ளும். இவற்றுக்கான செலவுகள், அவ்வீட்டுத் திட்டத்திலுள்ள குடியிருப்பாளர்களிடம் அந்த சபையினால் அறவீடு செய்யப்படும் மாதாந்த சந்தாக்கள் மூலமான நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் ஏற்கனவே செயற்பட்டு வந்த முகாமைத்துவ சபையின் வங்கிக் கணக்கில் நிலையான சேமிப்பில் சுமார் ஐந்து மில்லியன் ரூபா இருந்தது. அப்போது அந்த முகாமைத்துவ சபைக்கு எதிராக சில குடியிருப்பாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திற்கென ஒரு மலசலகூடக் கழிவுத் தொகுதி அமைக்கப்பட்டது. அதுவே தற்போது பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கிறது.

இவ்வாறான சூழலில் அதனை அகற்றுமாறு கல்முனை மாநகர சபையையோ முதல்வரையோ கோருவதும் குற்றஞ்சாட்டுவதும் அர்த்தமற்றது. இந்த விடயமானது மாநகர சபையின் அதிகார பரப்புக்குட்பட்டதல்ல. இருப்பினும் அங்குள்ள மக்கள் நலன்கருதி தனது ஆலோசனையின் பேரில் கல்முனை மாநகர சபையினால் முடியுமானளவு கழிவகற்றல் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் என் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் மக்களை வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுடன் கூடிய விசமப்பிரசாரமாகும் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)

No comments

Powered by Blogger.