சிறிலங்காவுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவதாக, நோர்வே பிரதமர் உறுதி
சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.
நோர்வேக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் இரவு, ஒஸ்லோவில் நோர்வே பிரதமர் எமா சோர்பேர்க்கை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, இரு நாடுகளின் பிரதமர்களும் கூட்டாக ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இதன்போதே, சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கு நோர்வே கடந்த காலங்களில் அளித்த உதவிகளுக்காக நன்றி தெரிவித்த சிறிலங்கா பிரதமர், அம்பாந்தோட்டையின் கிராமப் புற அபிவிருத்திக்காக நோர்வேயிடம் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தியப் பெருங்கடலில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், நோர்வேயிடம் சிறிலங்கா உதவி கோரியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பெருங்கடலில் நிலையான அபிவிருத்தி தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
இந்தியப் பெருக்கடலை நிலையான அபிவிருத்தி வலயமாக மாற்றுவது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து, ஏற்கனவே இணங்கப்பட்ட விடயங்களை தொடர்ந்து செயற்படுத்தவும் இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளன.
அத்துடன், சிறிலங்காவுக்கு அதிக பட்ச உதவிகளை வழங்குவதாகவும், நோர்வே பிரதமர் சொல்பேர்க் உறுதியளித்துள்ளார்.
Post a Comment