தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாவிட்டால் நாமனைவரும் தோற்றுப் போய்விடுவோம்
சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் தேர்தல்களில் நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். இதற்கு எமக்குள் விட்டுக்கொடுப்புகள் தேவை. நாம் ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாவிட்டால் நாமனைவரும் தோற்றுப் போய்விடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் தனது ஒருமித்த கருத்தினை அரசாங்கத்திடம் முன்வைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு நேற்று முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள செடெக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
மைத்திரிபால சிறிசே பொது அபேட்சகராகப் பெயரிடப்பட்டதும், செய்தியாளர் மாநாட்டில் அவர் மூன்று வாக்குறுதிகளை முன்வைத்தார். தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது, தேர்தல் சீர்திருத்தம், ரணிலை பிரதமராக நியமித்தல் என்பவை அவை. தேர்தல் பிரசாரத்தின்போது இந்த வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன.
தேர்தலின் பின்பு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமனம் பெற்றதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முதன்மைக் குறிக்கோளாக அமைந்தது தேர்தல் முறைமையில் மாற்றங்களே. இதுவே அவர்களது தேவையாக இருந்தது. விருப்பு வாக்கு முறைமையை இல்லாமற் செய்வதும் தொகுதிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய ஒருவரைத் தெரிவு செய்யும் தேர்தல் முறைமையையே அவர்கள் விரும்பினார்கள். எங்கள் தரப்பு முதலாவது அதிகாரப் பகிர்வே வேண்டும் என்றது. ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதையே ஆதரித்தது. இந்த மூன்று மாற்றங்கள் பற்றியே பேசப்பட்டது.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டபோது மாற்றுக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் மலைநாட்டு அரசியல் கட்சிகளும் 60% – 40% கலப்பு தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் முதலில் இணங்கியபோது இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. முதலில் இணக்கப்பாடு தெரிவித்து விட்டு பின்பு மாற்றுக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டதை இடைக்கால அறிக்கையில் நாம் சேர்த்திருந்தோம்.
2017 செப்டெம்பரில் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது மூன்று மட்டத்திலும் 60% –40% தேர்தல் முறைமை அமையவேண்டும் என தீர்மானிக்கப் பட்டது. 60% –40% கலப்புமுறை தேர்தலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்கும் அமுல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே உள்ளூராட்சி சட்டம் திருத்தப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் இதனை அங்கீகரித்தன.
இதன் பிறகு மாகாண சபை தேர்தலுக்கும் அதே முறையில் நடத்துவதற்கே சட்டம் இயற்றப்பட்டது. இதனை அமுல்படுத்துவதற்கு முஸ்லிம் கட்சிகளும் மலைநாட்டு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. கலப்பு தேர்தல் முறை 60% –40% அல்லது 50%– 50% ஆக அமைய வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டது.
அத்தோடு எல்லை நிர்ணய அறிக்கை 2/3 பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்படாவிட்டால் மீளாய்வு செய்யப்பட வேண்டும். மீளாய்வுக் குழு தனது அறிக்கையை 2 மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தல் 60% –40% கலப்புத் தேர்தல் முறையிலேயே நடந்தது. இத் தேர்தலின் பின்பு பல பிரச்சினைகள் உருவாகின. இந்த கலப்பு முறைமையினால் கூட நிலையான ஆட்சியை நிறுவுவதற்கு சவால்களை உருவாக்கும் என்பது தெளிவாகியது.
அடிப்படைக் கோட்பாடு பெரும்பான்மை ஆட்சியாகும். இலகுவான பெரும்பான்மை ஆட்சியென்பது அதுபேரினவாத்துக்கு வழிவகுக்கும். பல்வேறு இனங்கள், மொழி, மதங்கள் இருக்கும் ஒரு நாட்டில் வித்தியாசமான பொறிமுறைகளை உள்வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரும்பான்மையினரின் சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும்.
அதனால் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கின்ற அதே விகிதாசாரத்தை பிரதிநிதித்துவ சபையில் கொண்டிருக்க வேண்டும் என நாம் கூறக்கூடாது. அதை விட கூடுதலான பிரதிநிதித்துவம் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவ சபையில் கட்டாயமாக இருக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம். இங்கு நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் ஏனைய பகுதிகளில் சிறுபான்மையாக இருக்கிறோம். எனவே மூன்று தளங்களிலும் ஒரே மாதிரியான தேர்தல் முறையை கொள்வது சிரமமானதாகும். மாகாணத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம்.
தேர்தல் சீர்திருத்தம் என்பது அதிகார பகிர்வுடன் சேர்த்துப் பார்க்க வேண்டிய விடயமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனால் மாகாண சபையின் ஆட்சி எமக்குள் இருக்க வேண்டும் என்பதிலே எமது கவனம் இருக்கும். மாகாண மக்களின் கைகளிலேயே மாகாண ஆட்சி இருக்க வேண்டும். சிதறி வாழும் மக்களின் நிலைப்பாடு இதிலிருந்து வேறுபாடானதாக இருக்கும்.
ஏ.ஆர்.ஏ.பரீல், எம்.ஏ.எம். அஹ்ஸன்
Post a Comment