Header Ads



திருக்குர்ஆன் செய்த மருத்துவம்

குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாத, காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி அரபு தேசத்தில் உருவானது. இந்தக் கருத்தை நாம் மக்களிடம் கூறினால் இந்த மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சீர்திருத்தவாதி யார்? அவர் என்ன மருத்துவம் செய்தார்? அவர் சாதாரண ஆளாக இருக்க முடியாது என்றெல்லாம் வியந்து கேட்பார்கள்.

அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்கு, குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புதப் பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோக நோய் தீர சிறந்த மருந்தாக இருந்தது.
எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் முன்வைத்தது.
பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
அல்குர்ஆன் 16:67

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான்.
இரண்டு பொருட்களைப் பற்றி பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்றக் கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது. மது சிறந்ததல்ல என்றக் கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.
இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219
இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது.
தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டும் என்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்கு பழகிக் கொள்வார்கள். எனவே தான் மனித இயல்பை அறிந்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
அல்குர்ஆன் 4:43
இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.
அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், "நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!’ (4:43) என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: அபூதாவூத் 3186
இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அல்குர்ஆன் 5:90
எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன.
சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும்? என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மனநிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான்.
எடுத்த எடுப்பிலே மதுவை குடிக்கக் கூடாது என்று கூறியிருந்தால் இச்சட்டத்திற்கு யாரும் கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம் என்று கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.)
நூல்: புகாரி 4993

குர்ஆனின் இந்த வழிமுறையை நமது அரசும் பின் பற்ற வேண்டும். முதலில் மதுவுக்கு எதிரான பிரசாரத்தை அனைத்து மட்டத்திலும் கொண்டு வர வேண்டும். அடுத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இலவசமாக மது மறு வாழ்வு மையம் அமைத்து மது அடிமைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். கள்ள சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதன் பிறகு சில மாதங்கள் கழிந்து முற்றிலுமாக மதுவுக்கு நாடு முழுக்க தடை கொண்டு வர வேண்டும். மது குடிப்பவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து ஊடுருவும் கள்ள சாராயத்தை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
அரசே சாராயத்தை விற்கும் ஒரு நாட்டில் இதெல்லாம் சாத்தியப்படுமா என்று கேட்கலாம். மக்கள் நினைத்தால் போராட்டத்தின் மூலம் இதனை சாத்தியமாக்கலாம்.


No comments

Powered by Blogger.