Header Ads



திரண்டெழுமாறு நான் அனைத்து, இலங்கையர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் -இம்தியாஸ்

தற்போது நேர்ந்துள்ள அரசியல்யாப்பு நெருக்கடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் இமதியாஸ் பாக்கிர் மாக்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒரு அரசியலமைப்பு என்பது ஒரு நாடு எவ்வாறு ஆட்சி செய்யப்பட வேண்டும், எப்படி அதிகாரத்தை விநியோகிப்பது மற்றும் கட்டுப்படுத்தப்படுத்துவது, ஒரு பிரஜைக்கு உள்ள உரிமைகள் என்ன என்பவற்றைக் குறிப்பிடுவதாகும்.

1931 ஆம் ஆண்டின் டொனமூர் யாப்பிலிருந்து தொடங்கி இலங்கை தனது பிரதிநிதிகளை அரசாங்கத்திற்கு தெரிவு செய்யும் உலகளாவிய வாக்குரிமை அந்தஸ்தைப் பெற்று உலகின் பழைமை வாய்ந்த ஜனநாயக நாடாகப் பேர் பெற்றிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் சதிப்புரட்சிகளும் சர்வாதிகாரமும் அரசியல்யாப்பு ரீதியான உடைவுகளும் நடைபெற்று வரும் வேளையில், இலங்கை பனிப்போர் காலத்திலும் இளைஞர்களின் அமைதியின்மை நேரத்திலும் 30 வருட யுத்த காலத்திலும் தனது யாப்புக்கு மதிப்பளித்து அரசை நடத்திச் சென்றிருக்கிறது. ஒரு நாட்டை ஆள்வதற்குரிய அதனது யாப்புக்கு மதிப்பளிக்காதவரை ஒடுக்குமுறையே மக்களை ஆட்சி செய்யும் நிலை தோன்றுகின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாகும். இதற்கு முன்னர் நிகழ்ந்திராத நிகழ்வுகளின் தொடரொன்றே தற்போது எமது கண் முன்னால் விரிகிறது. ஒரே தேசத்தவர் என்ற வகையில் நீதியான நல்லாட்சி அமைப்பதற்கும், நமது அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் ஒன்றுபடுவதற்கு நாங்கள் தார்மீக ரீதியில் கடமைப்பட்டிருக்கிறோம்.

நிச்சயமற்ற இந்தச் சூழலில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த கெளரவ சபாநாயகர் எடுத்த வலுவான நிலைப்பாட்டை பாராட்டும் அதேவேளை, சபாநாயகர் அவர்கள் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கும் நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். அத்தோடு உரிய முறையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில் முன்னணி வகிப்பவரைத் தெரிவு செய்வதற்கு அனுமதிக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தை நிலைநாட்டி வலுப்படுத்திக் கொள்வதில் இலங்கை இந்தப் பிராந்தியத்துக்கான ஒளிக்கீற்றாக விளங்குகிறது. ஜனநாயகப் பெறுமானங்களைக் குறைத்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகின்ற மற்றும் வன்முறைசார்ந்த எந்தச் செயற்பாடுகளுக்கும் எதிராகத் திரண்டெழுமாறு நான் அனைத்து இலங்கையர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த மிக முக்கியமான சூழ்நிலையில் மிகுந்த பொறுப்போடு செயல்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் முடிவு இலங்கையின் வருங்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில் அது நிச்சயமாக எங்களது வரலாற்று ஏடுகளில் பதியப்படும்.

1 comment:

Powered by Blogger.