முஜிபுடன் பாராளுமன்றத்தில் விமல், கம்மன்பில கடும் வாக்குவாதம் - கிடுகிடு என ஒழுங்குப் பிரச்சினை
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களும் இலங்கையர்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என முஜிபுர் ரஹ்மான் சபையில் தெரிவித்தபோது, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இதன்போது 12ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்த மஹிந்த ராஜபக்ஷ் ஜனநாயகவாதி என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நாங்கள் எவ்வாறு பிரிவினைவாதியாக முடியும் எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதிச்சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது புலிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். விடுதலைப்புலி அமைப்பில் இருந்த இளைஞர்களும் எமது இளைஞர்களாவர். அவர்கள் தூத்துக்குடியில் இருந்து வந்தவர்கள் அல்ல. என்றாலும் அவர்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்தும் அந்த வழியில் செல்ல அனுமதிக்கமுடியாது.
அத்துடன் 70,78 காலப்பகுதியிலும் ஆயுதப்போராட்டங்கள் இடம்பெற்றன. அப்போதும் இளைஞர்கள் பிழையாக வழிநடத்தப்பட்டனர். அவர்களை சமூகத்துக்குள் உள்வாங்கியதுபோல் புலி உறுப்பினர்களையும் சமூக மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து விமல் வீரவன்ச எம்.பி. கருத்து தெரிவிக்கையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குவதையே எதிர்க்கின்றோம் என்றார்.
இதற்கு பதிலளித்து தொடர்ந்து முஜுபுர் ரஹ்மான் உரையாற்றுகையில், அரன்தலாவையில் பிக்குகளை கொலைசெய்த, தலதா மாளிகைக்கு குண்டுவைத்தவர்கள், காத்தான்குடி பள்ளியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவிக்கின்றீர்கள். இந்த இடங்களுக்கு தாக்குதல் நடத்திய கருணா அம்மான், பிள்ளையானை இணைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உப தலைவர் பதவியும் வழங்கியிருந்தீர்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க நடவடிக்கை எடுக்கும்போது துடிக்கின்றனர். நீங்கள் இனவாதத்தை தூண்டுகின்றீர்கள்.
அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் வெற்றிக்காக 12ஆயிரம் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து வெளியேற்றும்போது விடுதலைப்புலிகள் நல்லம். நாங்கள் அதனை செய்யும்போது தேசத்துரோகம். இதன்போது மீண்டும் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில், ஜே.வி.பி. போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. அவர்கள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்தார்கள். அதற்கு முஜுபுர் ரஹ்மான் பதிலளிக்கையில், ஜே.வி.பி. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்கவும் புதிய சட்டமூலம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. தெற்குக்கு ஒரு நீதியும் வடக்குக்கு ஒரு நீதியும் செய்யமுடியாது. அனைவரும் சமமாகவே கருதப்படுவார்கள். அத்துடன் அதிகாரத்தில் இருக்கும்போது இவர்கள் அனைத்தையும் செய்துவந்தார்கள். அதனை நாங்கள் செய்யும்போது தேசத்துரோகம் என தெரிவித்து பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். அதிகாரம் இல்லாததனால் இனவாதத்தை தூண்டிவருகின்றனர். மீண்டும் இன, மதவாத நடவடிக்கைகளுக்கு அடிபணியமுடியாது. மிகவும் கஷ்டத்துடனே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.
இதன்போது கம்பன்பில எம்.பி. ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையில், உலகில் யுத்தம் இடம்பெற்ற நாடுகள் அனைத்தும் யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உலகில் எந்த நாடும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியதாக இல்லை என்றார்.
இதற்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. பதிலளிக்கையில், 30வருட யுத்தத்தில் மரணித்த அனைவரும் இலங்கையர்கள். அதனால்தான் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்துடன் நாம் எமது தேசிய கீதத்தை இசைக்கும்போது நாமனைவரும் ஒருதாயின் மக்கள் என்று தெரிவிக்கின்றோம். ஆனால் இவர்களுடன் இணைந்துகொண்டு அதனை செய்யமுடியாது. உலகை புதிதாக பார்க்க இவர்கள் தயாரில்லை.
அத்துடன் எமது நல்லிணக்க பயணத்துக்கு வடக்கில் சிவாஜிலிங்கம், விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வேறு போக்கில் செல்கின்றவர்கள் என்று எங்களுக்கு தெரியும். அதற்காக வடக்கு தமிழ் மக்கள் அனைவரும் இவர்களின் நிலைப்பாட்டில் இல்லை. அவர்கள் நல்லிணக்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னர் ஒன்றிணைந்து செயற்படமுடியுமானால், ஏன் எங்களால் முடியாது என கேட்கின்றேன்.
எனவே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்த பயணத்தை தொடராவிட்டால் மீண்டும் நாங்கள் அரசியல் ரீதியில் பின்தள்ளப்பட்டு விடுவோம். அதனால் எந்த சவால்கள் வந்தாலும் அரசாங்கத்தின் நல்லிணக்க பயணத்தை தொடருவோம் என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment