ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து ஊடகங்கள், வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது – ராஜித
தமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அறிவிக்காத விடயங்களை பிரசுரிக்கவோ ஒலி/ஔிபரப்பவோ வேண்டாமென ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு விடயங்கள் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
பிம்ஸ்டெக் மாநாட்டின்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் மட்டுமே ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கெதிரான கொலை சதித்திட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் ரோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை சீர்குலைக்கும் நோக்கில் சிலதரப்பினர் செய்திகளை வௌியிட்டு வருவதாகவே ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment