Header Ads



'தமிழ் மக்கள் கூட்டணி' என்ற, புதிய கட்சியை உருவாக்குவேன் - விக்னேஸ்வரன் அறிவிப்பு

-பாறுக் ஷிஹான்-

தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக தமிழ் தேசிய உணர்வுள்ள கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அரசியல் பயணம் செய்யவுள்ளதாக க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

தனது அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கும் இன்றைய -24- கூட்டத்தில் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்- 

தமிழ் சிங்கள முரண்பாடு அடுத்த வருடத்துடன் நூறு வருடத்தை எட்டவுள்ளது. தமிழ் மக்களின் சுய பாதுகாப்பு போராட்டம் அஞ்சல் ஓட்டமாக தொடர்ந்தது. தந்தை செல்வா வழியாக நகர்ந்து, ஆயுதப் போராட்டமாக பரிமாணம் பெற்று, 2009 இன் அரசியல் இராஜதந்திர போராட்டமாக எமது கையில் வந்தடைந்திருக்கிறது.

இது சுய பாதுகாப்பு போராட்டம். இதை கைவிட யாருக்கும் உரிமையில்லை. இந்த சுய பாதுகாப்பு போராட்டத்தில் இரண்டு இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். பலர் உயிர்களை தியாகம் செய்தார்கள். நிலங்களை இழந்தோம். ஆனால் சோர்ந்து போக மாட்டோம்.

நாம் எமது தனித்துவத்தை இழக்காமல் போராடாமல் இருந்திருந்தால் எமது தனித்துவம் இழக்கப்பட்டிருந்திருக்கும்.
எமது பிரச்சனையை தீர்க்க மஹிந்த ராஜபக்சவிற்கு வாய்ப்பிருந்தது. அவர் செய்யவில்லை. நல்லாட்சி அரசும் அதை செய்யவில்லை. அதிகாரமற்ற வடக்கு மாகாணசபையின் ஊடாக எமக்கு ஒதுக்கப்பட்ட சிறிய நிதியை வைத்து, இயன்றதை செய்தோம். இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இருந்த சமயத்தில் எம் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வுதான் மாகாணசபை முறை. எந்தவிதத்திலும் எமக்கு தீர்வாகாத மாகாணசபையில், பிழையானவர்களின் கைகளில் செல்லக்கூடாதென்பதற்காகத்தான் போட்டியிட்டோம். மாகாணசபை வினைத்திறனற்றதென சொல்பவர்கள் யாரென்றால், பிழையானவர்களின் கைகளில் மாகாணசபை செல்லக்கூடாதென அன்று சொன்னவர்கள்தான்.

ஆவா குழுவை மூன்று மாதங்களில் தன்னால் அடக்க முடியும் என ஆளுனர் சொல்வதில் எனக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஐந்து வருடத்தில் ஏன் ஆளுனர் மூலம் அவர்களை அரசு அடக்கவில்லை?
மாகாணசபையின் பின்னர் நான்கு வழிகள் எனக்கிருப்பதாக குறிப்பிட்டிருந்தேன்.

ஒன்று, அமைதியாக வீட்டுக்கு செல்வது. இரண்டு இன்னொரு கட்சியுடன் இணைந்து செயற்படல். மூன்று, புதிய கட்சியை ஆரம்பித்தல். நான்கு மக்கள் இயக்கத்தை ஆரம்பிப்பது.
முதலாவது வழியை தெரிவுசெய்தால், நான் குடும்பத்துடன் இருந்திருக்கலாம். உடல்நிலை சீரடையும். ஆனால், அதை தெரிந்தெடுத்தால், நான் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது.

நான் எந்த கட்சியின் உறுப்பினருமல்ல. எனக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் இடைவெளி அதிகரித்தது. என்னை பொம்மையாக வைத்து செயற்பட முனைந்தனர். இது பதவிப்போட்டியால் ஏற்பட்டதல்ல. இது கொள்கைரீதியானது. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிட நான் தயாரில்லை.
தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ள கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிடுவதும் சாத்தியமற்றது. அது பேரவையிலுள்ள மற்ற கட்சிகளை பகைப்பதாக அமையும்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தடம்புரண்டு ஒன்பது வாக்கு கட்சியுடன் கைகோர்த்திருக்கிறது. 1990களில் ஒரு கட்சி வெறும் ஒன்பது வாக்கை பெற்று நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றது. அவர்கள் தமிழ் மக்களின் மீதான இனவழிப்பிற்கு ஒத்தாசையாக இருந்தார்கள். அந்த ஒன்பது வாக்கு கட்சியே இன்று மாகாணசபையை விமர்சிக்கிறார்கள்.

வராது என தெரிந்தும் ஒற்றையாட்சியையும், பௌத்த மத முன்னுரிமையையும் அங்கீகரித்துள்ளனர். இதற்கு எங்கே மக்கள் ஆணை பெற்றார்கள்? இதற்கு கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டும். அரசாங்கத்தை சங்கடப்படுத்த கூடாது என்றும், பதவிகளிற்காகவும் நில அபகரிப்பு பற்றி பேசாமல் இருக்கிறார்கள் எமது தலைவர்கள். வலி வடக்கில் சிறு துண்டு நிலத்தை கைவிட்டு விட்டு, முல்லைத்தீவு மாவட்டமே பறிக்கப்படுகிறது. இதையெல்லாம் எமது தலைவர்கள் கவனிக்கவில்லை.
நல்லாட்சி அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பினர், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கை என்ன?

இன்றைய நெருக்கடியான, இக்கட்டான நிலைமையில் மக்கள் இயக்கத்தை தலைமை தாங்குவதே பொருத்தமானதென நினைக்கிறேன். கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், மக்கள் இயக்கமொன்றை ஆரம்பிப்பதை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

புது கட்சியொனறை ஆரம்பித்து தமிழ் தேசிய உணர்வுடன் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து, செயற்படவுள்ளேன். மக்கள் விரும்பியபடியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய மக்களிற்கு பணி செய்வேன்“ என்றார்

3 comments:

  1. This man is not suitable for politics. Last 5 years he wasted public money and the time. He is a Colombo Tamil and he does not know the real status of North-Eastern Tamils. He is trying creating more create more problems instead of solving it. God protect Tamils.

    ReplyDelete
  2. This gentleman enjoyed the luxury life with the public funds, since get on used to the luxury with the peoples money, now not ready to give up. Again trying to get to the seat to grab and exploit the hard earned money of the public and layman. He shows to the world that he is a real Tamil but it is not true in real sense. god only protect the innocent and true Tamil community as Cruso said.

    ReplyDelete

Powered by Blogger.