"பிள்ளைகள் வீட்டில் இருப்பது பாதுகாப்பு என நினைப்பது தவறு, திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம்"
சிறுவர்கள் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்ராணி பண்டார நேற்று கூறினார்.
சிறுவர்கள் முறையற்ற வகையில் இணையத்தை அணுகுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறுவர்கள் பல்வேறு வகையிலான சைபர் மீறல்களுக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் இது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் பல கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது என்றும் சில நாடுகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இக்காலத்தில் எங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைப்பது போதுமானதல்ல. வீடுகளில் அவர்களது சொந்த அறைகளுக்குள் இருந்தாலும் அவர்களுக்கு திரைமறைவில் தீங்குகள் ஏற்படலாம். எனவே பெற்றோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தமது கல்வித் தேவைகளுக்கு மாத்திரமே இணையத்தை அணுகவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்று அமைச்சர் கூறினார்.
உலக சிறுவர் தினத்தை கொண்டாடிய தேசிய நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் சந்ராணி பண்டார இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வின் போது உலக சிறுவர் தினத்தை குறிக்குமுகமாக தபால் முத்திரையும் தபால் உறைகளும் வெளியிடப்பட்டன.
குறிப்பிட்ட பாடங்களில் திறமை காட்டிய ஒன்பது மாணவர்களுக்கு பிரதமர் சான்றிதழ்களை வழங்கினார்.
தபால் முத்திரை மற்றும் முதல் நாள் உறை ஆகியவற்றை வடிவமைத்த மாணவருக்கு விசேட விருது வழங்கப்பட்டது.
இலங்கையில் ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தி நடைமுறையை மேம்படுத்த உலக வங்கி எமக்கு உதவியுள்ளது. உலக வங்கி இவ்வாறு உதவிய முதலாவது ஆசிய நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முன் பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும், முன் பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சிகளை வழங்கவும், பகல் நேர பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு இலவச உணவு மற்றும் அரசாங்க நிரவாகத்தின் கீழ் மேற்படி நிலையங்களை அமைக்கவும் உலக வங்கி உதவி வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பகல் நேர பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் இளம் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கும் பயன்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
2017 ஆம் ஆண்டும் சுமார் 4 ஆயிரம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுவர்கள் மீது 956 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இவர்களில் 112 சிறுவர்கள் சிறுவர் வேலைக்காரர்கள், 117 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியவர்கள் மற்றும் 602 சம்பவங்களில் சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எமது சிறுவர்களை தைரியத்துடன் முன்செல்ல வலுப்படுத்துவோம் என்பதே இவ்வருட உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்..
Post a Comment