மகிந்தவின் மச்சானே எல்லாவற்றுக்கும் காரணம் - பிரியங்கர ஜயரத்ன
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சராக பதவி வகித்த போதிலும் அந்த நிறுவனம் சம்பந்தமான எந்த முடிவுகளையும் தன்னால் எடுக்க முடியவில்லை என முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
விமான சேவையின் நடவடிக்கைகளை கூட அறிந்து கொள்ள முடியாத அளவில் பல தடைகளையும் பிரச்சினை எதிர்நோக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது.
அமைதியாக இருந்ததுடன் எதனையும் செய்து கொள்ள முடியாத அளவு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் கேலி கிண்டல்களுக்கு ஆளானதாகவும் பிரியங்கர ஜயரத்ன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த போதே முன்னாள் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் என்னிடம் கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கு பதிலளிக்க முடியாது அசௌகரியமான நிலைமையை எதிர்நோக்கினேன்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க உட்பட பணிப்பாளர் சபையினர், அமைச்சர் என்ற வகையில் என்னை கவனத்தில் கொள்ளாது நிதியமைச்சு மற்றும் நிதியமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாக இணைந்து செயற்பட்டனர்.
இதனால், விமான சேவை நிறுவனம் தொடர்பான ஆராய அமைச்சின் செயலாளர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை நியமித்தேன். அந்த குழுவினால் முன்னோக்கி செல்ல முடியவில்லை.
விமான நிறுவனத்திற்கு விமானங்களை கொள்வனவு செய்துவது தொடர்பான ஒப்பந்தத்தை சீபரி நிறுவனத்திற்கு வழங்கியமை உட்பட எந்த விடயங்களையும் நான் அறிந்திருக்கவில்லை. அங்கு நடந்த எதுவும் எனது தலையீட்டின் அடிப்படையில் நடக்கவில்லை.
இந்த நிலைமையில், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை நிதியமைச்சின் கீழ் கொண்டு வருமாறு நான் கேட்டுக்கொண்ட போதிலும் அது நடக்கவில்லை.
ஸ்ரீலங்கன் விமான சேவை சம்பந்தமான பணிகளை மேற்கொள்வது தடைகளும் பிரச்சினைகளும் இருப்பது மற்றும் அப்போது நிறுவனத்தில் நிலைமைகள் பற்றி முன்னாள் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, காமினி செனரத்தை இரண்டு முறை தனிப்பட்ட ரீதியில் சந்திதது தெரியப்படுத்திய போதிலும் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
விமான சேவை சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவும் பணிப்பாளர் சபையினருமே எடுத்தனர்.
மேலும் தேசிய வரவு செலவுத்திட்டத்தில் ஸ்ரீலங்கன் மற்றும் மிறின் லங்கா விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அமைச்சுக்கு கிடைக்கவில்லை.
மேலும் ஸ்ரீலங்கன் விமான சேவை சம்பந்தமான எந்த விடயங்கள் குறித்து முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க என்னுடன் கலந்துரையாடியதில்லை. 14.2 பில்லியன் பணம் பிணை முறியாக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு கிடைத்ததா கிடைக்கவில்லையா என்பது எனக்கு தெரியாது.
இது குறித்து எவரும் எனக்கு தெளிவுப்படுத்தவில்லை. அது தொடர்பாக ஆராயவுமில்லை. விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, தனக்கு பொறுப்பான அமைச்சை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டதே இதற்கு காரணம் எனவும் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment