இலங்கையிலிருந்து உம்றா, செல்வோருக்கு அடாவடி - சவூதி தூதரகம் அநீதி
இலங்கையிலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஸ்ரீலங்கன் விமானசேவை மற்றும் சவூதி விமானசேவை ஊடாக மாத்திரமே பயணிக்க முடியும் என இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் உம்ரா முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால், உம்ரா பயணிகள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக உம்ரா முகவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்து குவைத், ஓமான் விமான சேவை மற்றும் பிளைய் டுபாய் விமானசேவை மூலமும் உம்ரா பயணத்தை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவூதி தூதரகம் இந்த நடைமுறையினை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உம்ரா பயணிகள் ஸ்ரீலங்கன் அல்லது சவூதி விமானசேவை பயணச்சீட்டினை குறிப்பிட்ட விமானசேவை தலைமையகத்தில் உறுதி செய்துகொள்வதுடன் தடுப்பூசி ஏற்றிக்கொண்டதற்கான அத்தாட்சியையும் சவூதி தூதரகத்தில் சமர்ப்பித்தால் மாத்திரமே கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உம்ரா விசாவினை சவூதி தூதரகம் கடவுச்சீட்டில் பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சவூதி தூதரகம் இவ்வாறு இது விடயத்தில் ஏகபோக தனியுரிமை பிரயோகிக்க முடியாதெனவும் திறந்த ஆகாயக் கொள்கைக்கிணங்க தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் உம்ரா முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.எம்.பாஹிமிடம் வினவியபோது அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் எந்தவோர் முறைப்பாடும் எழுத்து மூலம் கிடைக்கவில்லை. அவ்வாறு முறைப்பாடுகள் கிடைத்தால் சவூதி தூதரகத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடலாம் எனத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து வருடாந்தம் 35 ஆயிரத்துக்கும், 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட உம்ரா பயணிகள் சவூதிக்கு யாத்திரை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli
THEY ALREADY DID IN INDIA, THE COMMISSION WILL BE SHARE BY KSA AMBASSADOR & SL MUSLIM REGIONAL MINISTER.
ReplyDelete