இழப்பீட்டுக்கான சட்டமூலம், முஸ்லிம்களுக்கு பயன் கிட்டுமா..?
-SNM.Suhail-
இழப்பீட்டுக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் பொது எதிரணியின் எதிர்ப்புக்கு மத்தியிலும் 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் பதிவாகின. இந்த வாக்கெடுப்பில் ஜே.வி.பி. கலந்துகொள்ளவில்லை.
இலங்கையில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற இன மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டு சட்ட மூலம் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்தை தயாரிப்பதற்கும், இழப்புக்கான எதிரீடுகளுக்கு தகவுடைய இன்னலுற்ற ஆட்களை அடையாளம் காண்பதற்கும், அத்தகைய ஆட்களுக்குத் தனியான மற்றும் கூட்டாக இழப்புக்கான எதிரீடுகளை வழங்குவதற்கென ஏற்பாட்டைச் செய்வதற்கும், 1987 ஆம் ஆண்டு 29 ஆம் இழக்க ஆட்களுக்கு புனர்வாழ்வளித்தல் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைத்தல் அதிகாரசபை சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடை நேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமான காரணிகள் உள்ளடக்கப்பட்டு பாராளுமன்றில் விவாதம் இடம்பெற்றது.
இந்த சட்டமானது புலிகளுக்கு ஆதரவானது என கூட்டு எதிரணியினர் கடந்த புதனன்று பாராளுமன்றில் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அத்தோடு, இவ்விடயம் இன ரீதியிலான கண்ணோட்டத்தில் கூட்டு எதிரணியினர் பார்ப்பதையும் அவதானிக்கமுடிகின்றது. இதுதவிர சாதாரண சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இந்த சட்டமானது புலிகளுக்கு ஆதரவானது, புலிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு காய்நகர்த்தலை மேற்கொள்கின்றது என்றெல்லாம் குறிப்பிட்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களிலிருந்து பல்பக்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் எவ்வாறிருந்தன என பார்ப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர்
காலம் தாழ்த்தியேனும் இந்த காரியாலயம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. காரியாலயம் உருவாக்கப்பட்டு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், இழப்பீடுகள் மற்றும் மீண்டும் இவை இடம்பெறாமை என்பன நிலைமாறு பொறிமுறையின் அம்சங்களாகும். இவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியம் பெறுகின்றது. இது நீதியை புறக்கணிக்கும் வகையில் அமையக்கூடாது. மேலும் இந்த சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் மூலம் அரசாங்கம் கொள்கை உருவாக்கம், இழப்பீடுகள் வழங்கும் சட்டத்திலும் சில விடயங்களை மேற்கொள்ளவும் உதவியாக அமைய வேண்டும். இது தொடர்பில் சுயாதீனமாக செயற்பட வேண்டும். இழப்பீடுகள் வழங்குவது குறித்த வழிமுறைகள் அடையாளம் காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கே இதில் இழப்பீடுகள் வழங்க வேண்டும். இழப்பீடுகள் என்றால் அதனை எவ்வாறு வழங்குவது என்ற திட்டம் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் எதிர்காலத்தை, அவர்களின் வாழ்க்கையை கொண்டுநடத்த உதவியாக இவை இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அதன் மூலமாகவே மக்கள் சுயாதீனமாக வாழ முடியும்.
கெஹெலிய ரம்புக்வெல
சட்டமூலம் குறித்து எமக்கு சந்தேகமுள்ளது, நட்டஈடு வழங்குவதில் விடுதலைப்புலிகளின் எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கு மட்டுமே நட்டஈடு வழங்க வேண்டும். ஆனால் இந்தக் காரியாலயம் அதனை எவ்வாறு உறுதிப்படுத்தும் என்ற கேள்வி எழுகின்றது. விடுதலைப் புலிகளின் தொடர்பில்லை என்று எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள். விடுதலைப் புலிகளின் அமைப்பின் பலர் சிவில் வேடத்தில் இருந்தனர். அவர்கள் கொல்லப்பட்டவுடன் அவர்களை பொதுமக்கள் என கூறிவிடுவார்கள். ஆகவே இதில் நெருக்கடி உள்ளது.
பிரதமர் ரணில்
காணாமற்போனோர் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இழப்புகளுக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம் உருவாக்கப்படுகின்றது. இதில் வெறுமனே வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. வடக்கு, கிழக்கில் மட்டுமே அவ்வாறு காணாமல்போனோர் பிரச்சினை இடம்பெறவில்லை. தெற்கிலும் பலர் காணமலாக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் நியாயமான இழப்பீடுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக காணாமல் போனவர்கள் குறித்து இழப்பீடு அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. நான்கு உறுப்பினர்களை கொண்ட சபை மூலமாக இவை கையாளப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர்
இழப்புகளுக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம் சகல இலங்கையரின் பாதுகாப்பு குறித்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றது. இந்த சட்டமூலத்தின் குறிக்கோள்கள் என்னவெனில், அமைச்சரவைக்கு இழப்பீடுகளை வழங்குவது குறித்த விதிப்புரையை வழங்குவது மட்டுமே இந்த அலுவலகத்தின் கடமை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமல்ல சகல பாதிக்கப்பட்ட மக்களையும் இது சாரும். இங்கே மனக்குறைக்கு ஆளாக்கப்பட்ட நபர் குறித்து கவனத்தில் கொள்ளும்போது , அரசியல் அல்லது சிவில் நெருக்கடியில் பாதிப்புக்குள்ளான சகல மக்களும் அவர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்ட நபர்களும், வடக்கு கிழக்கு மோதல்கள் என அனைவரையும் சட்டமூலத்தினால் உள்ளடக்கப்பட்டுள்ளது
பிமல் ரத்நாயக
வடக்கிலிருந்து சிங்கள மக்களை விரட்டியடிக்க வேண்டுமென்ற மன அழுத்தத்தை உருவாக்கியது அரசாங்கம். முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டிவிடவும் அரசாங்கமே காரணம். எவ்வாறு இருப்பினும் தவறுகள் இடம்பெற்றன. இப்போது அரசாங்கமும் தீர்வுகளை நோக்கி பயணிக்க விருபவில்லை.
வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை உள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை நன் கேட்டுள்ளேன். மீண்டும் இதனை உறுதிபடுத்துங்கள். வடக்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை மீண்டும் சம்பந்தன் கூற வேண்டும். அதுவே சிங்கள இனவாதிகளின் முகங்களில் சேறு பூசும் வகையாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
எம்.ஏ.சுமந்திரன்
அமைச்சரவைக் கூட்டத்தில் இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டம் குறித்து விவாதித்தபோது மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. இவ்வாறான நிலையில் குறித்த அலுவலகம் கொள்கைத் திட்டங்களைத் தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு வழங்கினால் அது அரசியல் மயப்படுத்தப்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது. இது துரதிஷ்டவசமானதாக இருக்கும். எனவே கொள்கைத்திட்டம் பற்றியும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
நமக்குள்ள சந்தேகம்
இழப்பீடுகள் பற்றிய கொள்கைகளை இழப்பீடுகள் பற்றிய அலுவலகம் தயாரித்து அமைச்சரவைக்கு அதனை முன்மொழியும். அதில் யாருக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும், இழப்பீடுகள் பற்றிய மதிப்பீடுகள் என்பன குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த செயற்பாடு சரியான முறையில் முன்னெடுக்கப்படுமா என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது.
குறிப்பாக யுத்தத்தால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்விடயம் கருத்திற்கொள்ளப்படுமா என்ற கேள்வி நம்மத்தியில் எழுகின்றது.
இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டம் வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமா? என்ற கேள்வி எழுகின்றது. வடக்கு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு 28 வருடங்களாகின்றன. இவ்விடயம் குறித்து அரசாங்கத்திடம் சரியான புள்ளி விபரங்களோ அறிக்கைகளோ கிடையாது. இந்நிலையில் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வி நம்முன் எழுகின்றது.
இதற்கு அப்பால் காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சுப்பொத்தானை, மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் முஸ்லிம்கள் கொத்துகொத்தாகப் படுகொலை செய்யப்பட்டது மட்டுமன்றி வர்த்தகர்களும் கடத்தப்பட்டனர். இவர்களுக்கு குறித்த சட்டம் என்ன நன்மையை வழங்கப்போகின்றது என்கின்ற சந்தேகங்கள் எழுகின்றன.
எனினும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்றோம். கால தாமதமாக இது கொண்டுவரப்பட்டாலும் கூட அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும், யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும். அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது, இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரும் இதன்போது சமமாக பார்க்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
Post a Comment