பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்கமாட்டேன், ரணில் ஒதுங்கிநின்று எங்களுக்கு உதவ வேண்டும் - கோதபாய
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதனை இயற்கையும் கொண்டாடுகின்றது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் பதவிப் பிரமாணம் தொடர்பில் கொழும்பில் சற்று முன்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டுக்கு தற்பொழுது இன்று மழை கிடைத்துள்ளது. மஹிந்தவின் வருகையை இயற்கையும் விரும்புகின்றது.
முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், முயற்சியான்மையாளர்கள் அனைவரும் அச்சமின்றி நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும். அரசாங்க அதிகாரிகள் கடமைகளைச் செய்வதற்கு இனி அஞ்ச வேண்டிய அவசியமில்லை, உங்களது கடமைகளை நீங்கள் முன்னர் செய்தது போன்று செய்யுங்கள்.
பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஏற்க மாட்டேன் அதற்கு வேறும் ஆட்கள் இருக்கின்றார்கள் தானே. மஹிந்த ஜனாதிபதியின் பிரதமர் பதவியின் கீழ் நாட்டை கட்டியெழுப்ப நாம் பாடுபடுவோம். எமக்கு பதவிகள் அவசியமில்லை.
நாடு பின்நோக்கி நகர்ந்துள்ள நிலையில் நாங்கள் நன்றாக கயிறு இழுத்து பழகியவர்கள் எனவே இந்த நாட்டை மீளவும் முன்னோக்கி நகர்த்த எங்களுக்குத் தெரியும்.
இதனைவிடவும் சவால்களுக்கு மத்தியில் நாம் அரசாங்கங்களை பொறுப்பேற்றுக் கொண்டிருந்தோம்.
ஓரமாக ஒதுங்கி நின்று ரணில் விக்ரமசிங்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென கோருகின்றேன் என கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதவரளிக்குமாறு நான் சர்வதேச சமூகத்திடம் கோருகின்றேன்,
ஏற்கனவே வேறும் தரப்பினருக்கு ஆதரவளித்து நாட்டுக்கு நேர்ந்துள்ள நிலையை பார்த்திருப்பார்கள் எனவே நாட்டை இன்னும் அதள பாதாளத்திற்கு இட்டுச் செல்ல வழியமைக்காது மஹிந்தவிற்கு ஆதரவளிக்குமாறு கோருகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Post a Comment