அடுத்தமாதம் விண்ணில் பாயவுள்ள, இலங்கை மாணவனின் ரொக்கட் (படங்கள் இணைப்பு)
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக, கம்பஹா பாடசாலை மாணவரொருவரினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ரொக்கட், நவம்பர் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது.
இதுவரை காலமும், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும், இந்தக் குறையை குறித்த மாணவர் நீக்கியுள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆரச்சி என்ற மாணவரே, இந்த ரொக்கட்டைத் தயாரித்துள்ளார்.
இந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தைக் கொண்டுள்ளதுடன், 25 கிலோ கிராம் நிறையையும் கொண்டுள்ளது. மணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் தயாரிப்பதற்கான உதவிகளை, தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார்.
ரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுப்புவதென்றால், விமானப்படை மற்றும் இராணுவப்படை ஆகியோரின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். எனினும், இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாகக் கிடைத்துள்ளது.
இதற்கமைய, நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து, இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளது. 25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு, 50 ஆயிரம் ரூபா பணம் மாத்திரமே கிஹான் செலவிட்டுள்ளார். இதன் முதலாவது பயணத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபா செலவாகவுள்ள நிலையில், இந்தச் செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில், அண்டை நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு, இது அச்சத்தை ஏற்படுத்தலாம் என, துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
This may succeed or fail. But we as a country should appreciate and encourage these kind of innovators..
ReplyDelete