அம்பாறை ஜம்மியத்துல், உலமாவின் கோரிக்கை
கல்விக் கல்லூரிக்கு இஸ்லாம் பாட கற்கை நெறிக்கு பயிலுனர்களைச் சேர்த்துக்கொள்ளும் போது மௌலவிச் சான்றிதழ் அல்லது அல் ஆலிம் தராதரச் சான்றிதழ் உடையவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்தனர்.
கடந்த இரண்டு வருட காலமாக இந் நடைமுறை கைவிடப்பட்டு க.பொ.த (உஃத) பரீட்சையில் இஸ்லாத்தை ஒரு பாடமாக எடுத்திருந்தால் போதுமானது என்ற அடிப்படையில் பயிருனர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
இது இஸ்லாம் பாடத்துக்கும், இஸ்லாமிய சமூகத்துக்கும் இழைக்கும் பாரிய துரோகமாக அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கருதுவதாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச் ஆதம்பாவா மதனி எம்.ஏ, அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் நாஸிர் கனி ஹாமி எம்.ஏ ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான தீர்மானம் அண்மையில் நடந்த அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாத்தைப் படிப்பதற்கும் அதை விளங்குவதற்கும் அறபு மொழி அடிப்படையான ஓர் ஊடகமாகும்.
இஸ்லாத்தின் மூலாதாரமான அல் குர்ஆனும் அஸ் ஸுன்னாவும் அறபு மொழியிலேயே அமையப்பெற்றுள்ளன.
மேலும் இஸ்லாம் தொடர்பான மேலதிக விளக்கங்கள், உசாவுகை நூல்கள், மார்க்கத் தீர்ப்புக்கள் முதலானவை அநேகமாக அறபு மொழியிலேயே வெளிவருகின்றன.
வெறும் க.பொ.த (உஃத) பரீட்சையில் இஸ்லாத்தை ஒரு பாடமாக எடுப்பவர்களுக்கு இவற்றை விளங்கிக்கொள்வதற்கான எந்த ஆற்றலும் கிடையாது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அறபுக் கல்லூரிகளில் பல வருடங்கள் பட்டம் பெற்று மௌலவிச் சான்றிதழ் பெற்று வெளியாகிய பல நூறு உலமாக்கள் இருக்கையில் வெறுமனே உயர்தரப் பரீட்சையில் இஸ்லாம் பாடத்தை ஒரு பாடமாக எடுத்தவர்களை கல்விக் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்வது பிழையான வழிகாட்டலில் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறையாகும்.
இலங்கையில் இரு நூற்றுக்கு மேற்பட்ட தனியார் அறபுக் கல்லூரிகள், இஸ்லாமிய நிலையங்கள் இயங்கிவருகின்றன. வருடா வருடம் பல நூறு பேர் மௌலவிச் சான்றிதழ் பெற்று வெளியாகிவருகின்றனர்.
அட்டாளைச் சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் ஒரு கற்கை நெறியாக உள்ளது போல் தர்கா நகர் தேசிய கல்விக் கல்லூரியிலும் இக் கற்கைநெறியை ஏற்படுத்துவதன் மூலம் பாடசாலைகளில் இஸ்லாம் பாடத்தைக் கற்பிப்பதற்கு வேண்டிய தகுதியான ஆசிரியர்களை பயிற்றுவிக்க முடியுமெனவும் இருவரும் விடுத்துள்ள செய்தியில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இஸ்லாம் பாடத்தை விளங்குவதற்கான பிரதான ஊடகமாக அறபு மொழி விளங்குவதாலும் க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளில்; அறபு ஒரு பிரதான பாடமாக உள்ளதாலும் அப் பாடத்தைக் கற்பிப்பதற்கு வேண்டிய ஆசிரியர்களை பயிற்றுவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இந்தவகையில் கல்வி அமைச்சு அட்டாளைச் சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இதற்கான கற்கை நெறியை ஆரம்பிப்பதன் மூலம் இதனை ஈடுசெய்ய முடியும்.
அத்துடன் இஸ்லாம் பாடத்துக்கான துணைப் பாடமாக அறபும், அறபுப் பாடத்துக்கான துணைப் பாடமாக இஸ்லாமும் அமைய முடியுமென அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கருதுவதாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச் ஆதம்பாவா மதனி எம்.ஏ, அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் நாஸிர் கனி ஹாமி எம்.ஏ ஆகியோர் மேலும் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டின் க.பொ.த (உ/த) பரீட்சைப் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய பயிலுனர்கள் கல்விக் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கல்வி அமைச்சு மேற்படி விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கின்றது.
AC. இம்தாத் (ஹாமி) B.A
(இணைப்பாளர் - அ.இ.ஜ.உ அம்பாறை கிளை)
Post a Comment