ஞானசாரரரின் கைதுக்கு காரணம், வெளிநாட்டு உளவுத்துறையே - தேசப்பற்றுள்ள பிக்குகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்காகத் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதி, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் கைது ஆகியவற்றின் பின்னணியில், ஐக்கிய அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராண்மை (சி.ஐ.ஏ), இந்தியாவின் உளவுத்துறை (ரோ) ஆகியன உள்ளவென, தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி, நேற்று (02) குற்றஞ்சாட்டியது.
அத்தோடு, சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவ்வமைப்புக் கோரியது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், அம்முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் கலந்துகொண்டு, இவ்விடயங்களை வெளிப்படுத்தினார். எனினும், தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எவற்றையும் அவர் இங்கு வெளிப்படுத்தியிருக்கவில்லை.
"மற்றைய தேரர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை, தேரர்களாகிய எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கலகொட அத்தே ஞானசார தேரர், தொடர்ச்சியாக இந்த நாட்டுக்காகத் தான் குரல்கொடுத்து வந்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத சிலரும் உள்ளனர். நாம், பௌத்த தர்ம போதனைகளின் அடிப்படையிலேயே செயற்படுகிறோம்.
இதனை முன்னிறுத்தியே நாம், ஞானசார தேரர் விடயத்தையும் பார்க்கிறோம். சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும், பௌத்த தர்மத்துக்கு எதிராகவே செயற்படுகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான தரப்பினர், நீதிமன்றத்துக்கு வழங்கிய தவறான தகவலின் பிரகாரமே, ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், “தன்னைக் கொலை செய்ய முற்பட்டவருக்கே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும்போது, ஞானசார தேரருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்”என்றார்.
இதன்போதே, ரோ, சி.ஐ.ஏ ஆகியவற்றின் மீதான தனது சந்தேகத்தை முன்வைத்த அவர், "புலனாய்வு முகவர்கள், தமது செயற்பாடுகளைச் சீராகச் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் தன்மையாகும்.
ஐ.அமெரிக்கத் தூதரகம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றால், இந்தப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. எமது நாட்டை வீழ்த்தவேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்" எனவும் தெரிவித்தார்.
பா.நிரோஸ்
Post a Comment