ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான, இனப்படுகொலை தொடருகிறது - ஐ.நா.
மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி வெளியான அறிக்கை ஒன்றில், மியான்மர் அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனால் செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா. புலனாய்வு அமைப்பினர் சம்பவம் நடந்த பகுதிக்கோ அல்லது இனஅழிப்பு பற்றி அகதிகளிடம் விசாரணை மேற்கொள்ளவோ தடை விதித்தது.
கடந்த வருடம் ஆகஸ்டில் இருந்து இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்காளதேச நாட்டிற்கு தப்பி சென்றுள்ளனர் என தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழு ஒன்று மர்ஜுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு மியான்மரில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், பெருமளவிலான கொலைகளை கடந்து, மக்களை சமூகத்தில் இருந்து ஒழித்தல், குழந்தை பிறப்பினை தடுத்தல் மற்றும் முகாம்களில் இருந்து எண்ணற்றோரை வெளியேற்றுதல் உள்ளிட்ட மோதல்களும் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய செய்தியாளர் சந்திப்பில், இனப்படுகொலை தொடருகிறது என குழு தலைவர் மர்ஜுகி தெரிவித்துள்ளார். அவர், வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்யாக்கள் மியான்மருக்கு திரும்புவதற்கு ஏற்ற பாதுகாப்புமிக்க, கண்ணியம் நிறைந்த சூழ்நிலைகள் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியினாலும் மரணத்திற்கான ஆபத்து உயரும் என தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய 444 பக்கங்கள் கொண்ட அறிக்கை கடந்த மாதம் வெளியானது. இந்த விவகாரம் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என ஐ.நா. அமைப்புக்கு அறிக்கையின் வழியே தெரிவிக்கப்பட்டது.
Post a Comment