முஸ்லிம் சமூகம், தூங்குவது ஏன்...? கவலைப்படுகிறார் கலாநிதி நௌபல்
மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை மூலம் தமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஏனைய சமூகங்களின் மதத் தலைவர்கள் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள நிலையில் எல்லை நிர்ணயங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைவர்களோ மத அமைப்புகளோ அரசியல் தலைமைகளோ இதுவரை எவ்வித முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்காமை கவலைக்குரியது என எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் உறுப்பினர் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் தெரிவித்தார்.
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் செயற்பாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘எல்லை நிர்ணயத்தில் தமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பௌத்த பிக்குகள் அமைப்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளன. ஏனைய மதத் தலைவர்களும் இவ்வாறு முறைப்பாடுகளைச் செய்திருந்தாலும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலமா சபையோ ஏனைய சிவில் சமூக அமைப்புகளோ அரசியல் தலைவர்களோ இதுவரை எவ்வித முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்கவில்லை.
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சரான பைசர் முஸ்தபாவுக்கு அனுப்பி வைக்க முடியும். அவ்வாறான முறைப்பாடுகள் எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் கவனத்திற்கொள்ளப்படும்.
எல்லை நிர்ணய மீளாய்வு குழுவிற்கு தனது அறிக்கையை தயாரிப்பதற்கு இரண்டு மாத கால அவகாசமே வழங்கப்பட்டது. அந்தக் கால எல்லை தற்போது பூர்த்தியாகியுள்ளது. இதுவரை பதவிக்கால நீடிப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் சபாநாயகரை தெளிவுபடுத்தியும் கால எல்லை நீடிக்கப்படவில்லை என்றாலும் மீளாய்வுக்குழு தனது கடமைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.
எமது சமூக அமைப்புகளும் சமூகத் தலைவர்களும் சமூகம்சார் விடயங்களில் தொடர்ந்தும் அக்கறையின்றியே இருக்கின்றனர். தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை நிலவுவதால் அரசியல் தலைவர்களும் சமூகம்சார் விடயங்களில் அக்கறையின்றி இருக்கின்றார்கள். இது சமூகத்துக்கு பாதிப்பாக அமையலாம் என்றார்.
-Vidivelli
If they feel that there will be monetary benefits our political traders (leaders) will shout. This is the fate of Srilankan Muslims.
ReplyDelete