நாம் பொறுமையாக இருப்போம் - நிமல்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேறு எந்தக் கட்சியுடனும் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைந்து செயற்பட விரும்பும் அனைவரும் எம்முடன் இணையலாம், அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
உரிய நேரத்தில் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் விவகாரம் மற்றும் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறும் ஆராய்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்பதே எமது முதல் தெரிவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.
எம்முடன் இணைந்து பயணிக்கும் சகல கட்சிகளையும், அமைப்புகளையும் இணைக்கும் வேலைத்திட்டம் இப்போதே முன்னெடுக்கபட்டு வருகின்றது.
எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் வரையில் நாம் பொறுமையாக இருப்போம். உரிய நேரத்தில் நாம் தீர்மானம் எடுக்க முடியும்.
இப்போது சிலர் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
எனினும் நாம் அவர்களுடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைந்து செயற்பட விருப்பும் நபர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும். ஐக்கிய தேசியக் கட்சியை போன்று பிரதான கட்சியாக நாமே உள்ளோம்.
ஆகவே வர விரும்பும் நபர்கள் எமது கட்சியுடன் இணைந்துகொள்ள வேண்டுமே தவிர நாம் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு புதிய கட்சிகளுடன் இணைந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு நாம் தயாராகவும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே இன்னும் அவர்கள் உள்ளனர். எனினும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களுடன் அவர்கள் தனித்து உள்ளனர். ஆனால் மீண்டும் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட எந்தத் தடையும் இல்லை.
இந்த அரசாங்கத்தை சரியான திசைக்கு கொண்டுசெல்ல சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராகவே உள்ளோம். தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஆட்சியை சரியாக நடத்த நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்படின் அதனையும் நாம் உரிய நேரத்தில் தீர்மானிப்போம். எமது நிலைப்பாட்டினை மக்களுக்கு நாம் சரியாக தெரிவிக்க விரும்புகின்றோம் எனக் குறிப்பிட்டார்.
Post a Comment