வடக்கு, முஸ்லிம்களின் மனக்குமுறல்
-கே.கான்-
உலக அரசியல் அரங்கில் நாடுகளின் வரலாற்றில் ஒரு இனம் அதன் உரிமைகள் அபிலாஷைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகிறதென்றால் அது இலங்கையில் வாழும் வடமாகாண முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும். மிக நீண்ட காலமாக பயங்கரவாத தாக்குதலுக்கு உட்பட்டு இன்றுவரை தமது தாயக மண்ணில் குடியேறி சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் எதிர்காலம் பற்றிய ஏக்கத்துடன் வாழ்ந்து வரும் சமூகமாகும். இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் இரத்தக்கறை படிந்த பல அத்தியாயங்களுக்குச் சொந்தமான ஆண்டாக 1990 விளங்குகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வேரறுக்கப்பட்ட இவ்வாண்டினை வடபுல முஸ்லிம்கள் இலகுவில் மறந்து விட முடியாது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம்கள் அதிக சிரத்தை கொண்ட பல கொடுமைகளை அனுபவித்து அச்சுறுத்தலுக்கு உள்ளான காலப்பகுதியாக ஒல்லாந்தர் காலப்பகுதியைக் குறிப்பிடலாம். ஆம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றினர். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியை விடவும் மோசமான ஒரு நிலை. புலிகளின் காலத்தில் முஸ்லிம்கள் அனுபவித்துள்ள துன்பங்கள், இழப்புக்கள் கறைபடிந்த வரலாறாகவே வடக்கு முஸ்லிம்களின் மனங்களில் பதிந்துள்ளது. இந்த உண்மையைத் தமிழ்த்தரப்பு நியாயவாதிகள் மறுக்கமாட்டார்கள் என்பது இவ்விடத்தில் எனது பணிவான கருத்தாகும்.
1990 களின் பிற்பகுதியில் இலங்கை வரலாற்றில் குறிப்பாக வடபுலத்தில் முஸ்லிம்கள் உள, உடலியல், பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக தாக்கப்பட்டு பாதிப்புக்குட்படுத்தப்பட்டனர். இந்நிகழ்வு உலகளவில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல தமிழர்களையும் தலைகுனிய வைத்தது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை விடுதலைப் புலிகளும் ஒருசில தமிழ் அரசியல் தலைமைகளும் ஏற்க மறுத்தாலும் தமிழ் புத்திஜீவிகள் மற்றும் சாதாரண தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வது ஆறுதல் தருகிறது. அதன் ஒரு அங்கமாகவே மிக நீண்ட காலமாக தமிழ் மக்களுடன் ஒன்றித்து வாழ்ந்த முஸ்லிம்கள் தொடர்ந்தேர்ச்சையாக புலிகளால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். புலிகளின் கெடுபிடிக்குள் சிக்குண்டாலும் தமிழ் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து ஒத்துழைப்பு வழங்கிய போதும் நாஸிஸ பாணியில் இரவோடு இரவாக விரட்டியடித்த சோக வரலாறு நாஸிஸப் படைகளை விட தாம் ஒன்றும் தரத்தில் குறைந்தவர்களல்லர் என்பதை மனிதப் படுகொலை மூலம் நிரூபித்துக் காட்டினர். இந்நிகழ்வு கறைபடிந்த வரலாறாகவே இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இருபத்தெட்டு வருடங்கள் கடந்தும் கசப்பான நினைவுகளுடன் காலத்தை கழித்து வருகின்றனர். காலங்கள் கடந்து கொண்டு செல்கின்றதே தவிர மாறி மாறி வரும் அரசாங்கங்களும் வடபுல முஸ்லிம்களைக் கண்டு கொள்ளவில்லை. முஸ்லிம் கட்சித் தலைமைகளும் அம்மக்களுக்கான சரியான தீர்வை இதுவரை பெற்றுத்தரவுமில்லை. எம்மை தலைநிமிர்ந்து வாழவைக்கவும் இல்லை. உலக அரங்கில் நீதிக்கும் சமாதானத்திற்குமாக உருவாக்கப்பட்ட ஐ. நாவும் இதுவரை வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. சர்வதேச சமூகமும் மௌனித்து விட்டது. மூன்று தசாப்தம் கடக்கப்போகிறது. ஆனால் அவர்களது உரிமைப் பிரச்சினை கிடப்பிலே கிடக்கிறது.
2002 இல் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட புலிகள் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியது ஒரு துன்பியல் நிகழ்வு எனக் கூறி சாதுரியமாக தப்பித்துக்கொண்டனர். இருந்தாலும் இதனை நம்பி மீண்டும் தமது தாயகம் நோக்கித் திரும்பிய முஸ்லிம்களை புலிகள் அம்மக்களை வரவேற்பதற்குப் பதிலாக புரோக்கர்களை வைத்து அவர்களது சொத்துக்களை விலைபேசினர். முழு வடக்கையும் தமிழர்களின் தாயகப் பூமியாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை மறைமுகமாக செயற்படுத்தினர். தமிழீழத்தில் தமிழர்களைத் தவிர மற்றைய இனங்கள் விரோதிகளே என அடையாளப்படுத்தினர். இது வடபுல முஸ்லிம்களை மேலும் வேதனைக்குட்படுத்தியது மட்டுமல்ல மீண்டும் உள ரீதியான பாதிப்புக்குட்படுத்தியது.
2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் அரச படைகள் வசமாகின. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தமது தாயக பூமியில் சுதந்திரமாக வாழலாம் என்ற எண்ணத்துடன் தங்கள் பிரதேசங்களில் குறிப்பிட்ட தொகையினர் குடியேறினர். ஆனால் அவர்களுக்கு அங்கு ஏமாற்றமே காத்திருந்தது. அங்கிருந்த அரச உயரதிகாரிகள் இவர்களது மீள்குடியேற்ற விடயத்தில் இறுக்கமான கட்டுக்கோப்பைப் போட்டு முஸ்லிம்களைக் குடியேற விடாமல் தொடர்ந்தும் தடுத்து வருகின்றனர். வடமாகாண சபையினூடாக விமோசனம் கிடைக்கும் என்றிருந்த முஸ்லிம்களுக்கு அதுவும் ஏமாற்றமளித்தது. முற்றுமுழுதாக இந்திய அரசின் செயற்திட்டத்திற்கு அமைவாகவே இச்சபை இயங்கி காலத்தைக் கடத்தியதுடன் முஸ்லிம்கள் விடயத்தில் கரிசனை காட்டப்படவில்லை என்பதுதான் உண்மை.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடிய கரிசனை காட்டவில்லை. தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் செயற்திட்டங்களிலேயே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றன. மாறிவரும் அரசாங்கங்களில் தமது கட்சி சார்ந்த நலன்களையும் அமைச்சுப் பதவிகளையும் வெளிநாட்டு வசதி வாய்ப்புகளையும் பதவிகளையும் மையப்படுத்தியதாவே அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால் தேர்தல் காலங்களில் ஏமாற்று அரசியலை மிக லாவகமாக நீலிக்கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்ற கபட அரசியலையே தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இவர்கள் இம்மக்களை வைத்து அரசியல் வியாபாரம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் அதிக வாக்குகளைக் கொண்ட கட்சி என்றும், முஸ்லிம்களின் ஏகபோக கட்சி என்றும் அதன் உரிமைக்கான கட்சி என்றும் கோஷம் எழுப்புவது மட்டுமே அதன் உரிமைக்கான குரலாக இருந்துகொண்டிருக்கின்றது. இக்கட்சியின் வளர்ச்சிக்கு வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒரு காரணமாக அமைந்தது என்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அறிந்திருந்தார். ஆனால் தற்போதைய தலைவர் இது விடயத்தில் வெறும் வார்த்தை ஜாலங்களால் காலத்தைக் கழித்துக் கொண்டு செல்கிறார். முஸ்லிம்களின் உரிமைக்காக வளர்த்தெடுக்கப்பட்ட இக்கட்சி இன்று சலுகைக்குள் கட்டுண்டு கிடக்கின்றது. அதனால் வடபுல முஸ்லிம் சமூகத்தின் தாகம் தணியாத பிரச்சினையாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
அதேநேரம் 2009 – 2011 வரை வடமாகாண முஸ்லிம்களுக்குக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தையும் தமது சுயநல அரசிலுக்காக நழுவவிட்ட காலத்தை நினைக்கும்போது வடபுல முஸ்லிம்கள் வேதனைப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அந்நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராகவும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சராகவும் இருந்த ரிஷாத் பதியுதீன் தனக்கும் தான் சார்ந்த முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைத்த அந்த வரப்பிரசாதத்தை அம்மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் கவனம் செலுத்தாததினால் இன்று அச்சமூகம் கைகட்டி, மௌனித்த மறு(றை)க்கப்பட்ட சமூகமாக மாறுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டார். ஆனால் தற்போது அங்கலாய்த்து கருத்துக்கள் தெரிவிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
2013 ஆம் ஆண்டு நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் ஓரளவு வடபுல முஸ்லிம்களுக்கு ஆறுதல் தரும், அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தமது வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையும் ஏமாற்றமளித்தது. அத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் நீதியாக நடந்து கொள்வார். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் நியாயமான உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பார் என்றிருந்த முஸ்லிகளுக்கு ஏமாற்றமே அளித்தது. அன்று விடுதலைப் புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்கள் மீது செய்தவற்றை இன்று வடமாகாண சபை அதிகாரத் தொனியில் சாதித்தனர். அரசியலில் தான் புதிதென்றாலும் அரசியல் சாக்கடையில் தானும் விதிவிலக்கல்ல என்பதைத் தனது ஐந்து வருடகால பதவியில் வடக்கு முதலமைச்சர் நிரூபித்து விட்டுச் சென்றுவிட்டார்.
அதேநேரம் வடமாகாண சபையில் வடக்கு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்திய முஸ்லிம் கட்சி சார்ந்த உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. குறைந்தது ஒரு பிரேரணையேனும் சபையில் முன்வைக்கவில்லை. அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான காணிப்பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிகள், வாக்குப் பதிவு, மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகளைக் களைதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாது நடந்து முடிந்த ஒவ்வொரு சபை அமர்விலும் கதிரையைச் சூடாக்கிக் கொண்டு தமக்குரிய வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி காலத்தை கழித்த வரலாற்று நிகழ்வையே காணக்கூடியதாக இருந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை வட, கிழக்கில் அதிகாரமுள்ள கட்சி என்றவகையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் இதய சுத்தியோடு ஆக்கபூர்வமான எந்தவொரு முன்நகர்வுகளும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அக்கட்சியில் இருக்கக்கூடிய ஒருசிலர் முஸ்லிம்கள் சார்பான கருத்துக்களை வெளியிட்ட போதும் அதிலுள்ள பெரும்பாலானவர்கள் முஸ்லிம் விரோதப் போக்கையே மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் கடைப்பிடித்து வந்தனர். மேலும் அப்பாவி தமிழ் மக்களையும் வீதிக்கு இழுத்து தாம் சார்ந்த விரோதப் போக்கை நியாயப்படுத்த முயல்வதானது வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களது இரட்டைப் போக்கைக் காட்டுகிறது மட்டுமல்ல வெட்கக்கேடான விடயமுமாகும்.
சர்வதேச சமூகத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தமது காரியங்களை கனகச்சிதமாகக் கையாளுகின்றனர். தெற்கில் சிங்கள பேரினவாதம் செய்கின்றதைப் போன்ற ஒரு கபட நாடகத்தை வடக்கில் தமிழ் பேரினவாதம் செய்துவருகின்றது. அதாவது வெளிநாட்டுத் தூதுவர்கள் உயரதிகாரிகளின் வருகையின் போது முஸ்லிம் மதகுரு ஒருவரை அழைத்து அந்த இடத்தை சமாளிப்பது மட்டுமல்ல இங்கு தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் நாம் ஒற்றுமையாக ஒன்றிணைந்து வாழ்கின்றோம் என்ற ஒரு மாயையைக்காட்டி தமது ஆதிக்க சக்தியை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்கின்றனர். கட்சி நலனுக்கு அப்பால் முஸ்லிம் புத்திஜீவிகளையும் அணுகி முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பாக பேசி அவர்களுக்கான நியாயபூர்வமான உரிமைகளை வழங்க சந்தர்ப்பம் வழங்காது ஒரு மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரலைச் செய்து வருகின்றனர்.
இன்று 28 வருடங்கள் கடந்தும் அகதி என்ற நாமத்துடன் அநாதரவாக முகவரியற்ற நிலையில் ஜனநாயக நாடொன்றில் ஒரு சமூகம் வாழ்ந்து வருகிறதென்றால் அது இலங்கையாகத்தான் இருக்கமுடியும். வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னரான மாறி மாறி வரும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வேதனையளிக்கின்றது. 2009 இல் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகக்குறுகிய காலத்தில் அரசின் செயற்திட்டத்துடன் மீள்குடியமர்த்தப்பட்டது போன்று மூன்று தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களை அரசாங்கம் கண்டு கொள்ளாதது அரசொன்றின் ஜனநாயக விரோதப் போக்கையே சுட்டிக்காட்டுகின்றது.
எனவே வடபுல முஸ்லிம்கள் இதுவரை காலமும் மறு(றை)க்கப்பட்ட சமூகமாகவே தொடர்ந்து இருந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அவர்களது உரிமைகள் மட்டுமல்ல உணர்வுகளும் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றுவரை நீறுபூத்த நெருப்பாகவே அவர்களது பிரச்சினை இருந்துகொண்டிருக்கிறது. நல்லாட்சியை நம்பி வாக்களித்தும் அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. தற்போது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதிகாரமாற்றமா? அல்லது மக்கள் நலன் சார்ந்த மாற்றமா? எது எப்படி இருப்பினும் வடபுல முஸ்லிம்களின் நிலை தொடர்ந்தும் கேள்விக்குறிதான்? இதுதான் எமது சமூகத்தின் தலைவிதியா? என அம்மக்கள் அங்கலாய்த்து வினா எழுப்புகின்றனர்.
இந்த நாட்டில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆணைக்குழுவை நியமித்து அதிலும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்து இழப்பீடுகளையும் நஷ்டஈடுகளையும் வழங்கிய அரசாங்கங்கள் வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் சுமார் 28 வருடங்கள் எந்தக் கரிசனையும் காட்டாது மௌனம் காப்பதன் இரகசியம்தான் என்ன? இந்த நாட்டின் உயர்மட்ட குழுவால் தயாரிக்கப்பட்டு அரசாலும் மற்றும் சர்வதேச சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) வினால் பரிந்துரைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு துரித மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு இன்னும் நடைமுறைப்படுத்தாததன் இரகசியம்தான் என்ன? முஸ்லிம் தலைமைகளே! அரசாங்கமே! வருகிற தேர்தல்களில் எங்களிடம் வாக்கு கேட்பதற்கு முன்னர் எமது பூர்வீக இடங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுத்தாருங்கள்.
இது வடக்கு முஸ்லிம்களின் மனக்குமுறலாகும்.
Post a Comment