ரணிலின் உயிருக்கு அச்சுறுத்தல், பாதுகாக்க எம்.பி.க்கள் முயற்சி, அவகாசத்திற்கு நாமல் வலியுறுத்து
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக 1008 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையினர் முற்றிலுமாக விலக்கப்பட்டு, தனியே அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினர் மாத்திரம், பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் கூட்டப்படும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் பிரதமருக்கான சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு, சிறிலங்கா அதிபருக்கு, சபாநாயகர் நேற்று கடிதம் அனுப்பியிருந்த நிலையிலும், கூட பாதுகாப்பை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றப் போவதாக கூட்டு எதிரணியினர் மிரட்டி வரும் சூழலில், அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, ஐதேக ஆதரவாளர்கள் தொடர்ந்தும், அலரி மாளிகையில் குவிந்துள்ளனர். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கேயே தங்கியுள்ளனர்.
இதன் மூலம், எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அலரி மாளிகையில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை அகற்றுவதற்கு தாங்கள், பலத்தைப் பிரயோகிக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு, அளித்துள்ள செவ்வியில் அவர், முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு, நியாயமான போதிய காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment