சவூதி அரேபிய ஊடகவியலாளர் கொலை, இலங்கை அரசாங்கம் கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
சவூதி அரேபிய ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட அனர்த்த நிலையை இலங்கை அரசாங்கம் கண்டிப்பதுடன், இத்தகைய நிகழ்வுகள் உலகில் எங்குமே இடம்பெறக்கூடாதென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இன்று (26) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் 07வது பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள், சவால்கள் மற்றும் கஷ்டங்கள் பற்றி விளங்கிக்கொள்ளக்கூடிய ஒருவர் என்ற வகையில் அரச கொள்கைகளுக்கேற்பவும் தனிப்பட்ட முறையிலும் ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் உறுதிப்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்
ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், ஊடகவியலாளர் ஒருவரை படுகொலை செய்வது, தொந்தரவுகளை கொடுப்பது, நாட்டை விட்டு வெளியேறச் செய்தல் போன்ற எந்தவொரு நிகழ்வும் தனது பதவிக்காலத்தில் இடம்பெறாததையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் இது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய வெற்றியாகுமென்றும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகள் பற்றி கண்டறிவதற்காக குழுவொன்றை அமைத்து, அதன் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்த பிரச்சினை தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்குத் தேவையான அரசாங்க தலையீட்டை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கருணாரத்ன கமகே, செயலாளர் தர்மசிறி லங்காபேலி உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.10.26
Post a Comment