வெள்ளத்தில் மூழ்கும், அபாயத்தில் இலங்கை - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் AccuWeather அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த வார இறுதியில் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளாந்தம் பெய்து வரும் மழைவீழ்ச்சியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் கேரளா மாநிலத்தின் பல பகுதிகள்வெள்ளத்தில் மூழ்கியமையினால் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வாரங்களில் கடும் வறட்சியான காலநிலை காணப்பட்ட போதிலும், இந்த வாரம் அதிகமழை வீழ்ச்சி பதிவாகவுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கேரளா மற்றும் தமிழகத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 50 - 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை காரணமாக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படும் ஆபத்து கேரளா மற்றும் தமிழகத்திற்கு உள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது இலங்கையில் அதிகரித்துள்ள மழைவீழ்ச்சி, வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் வெள்ள அபாயம் உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியான கொழும்பு, காலி மற்றும் நீர்கொழும்பு உட்பட பகுதிகளில் அதிகமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த பகுதிகளில் 100 - 200 மில்லிமீற்றர் அளவு மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும், இதனால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக குறித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அன்றாட மழை வீழ்ச்சிகள் தென்னிந்தியாவையும், இலங்கையையும் பாதிக்கும்போது, கேரளாவின் அரேபிய கடலில் சூறாவளி தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் ஆரம்பத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் தென்மேற்கு பருவமழை இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் வடபகுதியில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment